ADDED : நவ 25, 2024 02:25 AM

ஊத்துக்கோட்டை:ஆந்திராவில் உருவாகி, தமிழகத்தை நோக்கி பாயும் ஆரணி ஆற்று நீரை பிச்சாட்டூர் கிராமத்தில் அணை கட்டி சேகரிக்கப்படுகிறது. பின் அங்கிருந்து சுருட்டப்பள்ளி அணைக்கட்டு வழியே, 65.20 கி.மீட்டர் பயணித்து தமிழக எல்லையான ஊத்துக்கோட்டையை அடைகிறது.
அங்கிருந்து சிட்ரபாக்கம், பனப்பாக்கம், செங்காத்தாகுளம், பெரியபாளையம், பாலேஸ்வரம், எ.என்.அணைக்கட்டு வழியே, 66.40 கி.மீ., பயணித்து, பழவேற்காடு அருகே கடலில் கலக்கிறது.
இதில் ஊத்துக்கோட்டை பகுதியில் ஆரணி ஆறு அகலமாக உள்ளது. மழைக்காலங்களில் நான்கு அடி உயரத்திற்கு தண்ணீர் செல்லும். தற்போது மழைநீர் இன்றி காணப்படுகிறது. அவ்வப்போது பெய்து வரும் மழையால் ஆங்காங்கே தண்ணீர் குட்டை போல் உள்ளது.
அனந்தேரி செல்லும் பகுதியில் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து குப்பைகளை ஆற்றில் கொட்டுகின்றனர். இதை கண்காணிக்க வேண்டிய அதிகாரிகள் மெத்தனமாக உள்ளனர். மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.