ADDED : ஆக 23, 2026 06:12 PM
திருவள்ளூர் வேளாண் நிலங்களில் காட்டு பன்றிகள்... பயிர்களை சேதப்படுத்துவதால் விவசாயிகள் கவலை
திருவள்ளூர், ஆக. 24–
திருவள்ளூர் மாவட்டத்தில், வனப்பகுதி மற்றும் காட்டுப் பகுதிகளின் அருகில் விவசாய நிலங்களில் விளைவிக்கப்படும் பயிர்களை, காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி வருவது வழக்கமாகி வருகிறது. காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த வனத்துறை நடவடிக்கை எடுக்காததால், பெருத்த நஷ்டம் ஏற்பட்டு வருவதாக, விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில், 47 சதவீதம் பேர் விவசாயம் மற்றும் அதனை சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ளனர். மாவட்டத்தில், 2.80 லட்சம் ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்யப்படுகிறது.
இவற்றில், ஆண்டுதோறும், 2.50 லட்சம் ஏக்கர் பரப்பளவில், நெல் பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. அதற்கடுத்தபடியாக, கரும்பு, வேர்க்கடலை, பருப்பு வகைகளை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர்.
தோட்டக்கலை பயிர்களை பொறுத்தவரை, வாழை, மாம்பழம், கொய்யா, தர்ப்பூசணி மற்றும் அனைத்து வகை காய்கறிகளையும், விவசாயிகள் ஆர்வமாக பயிரிட்டு வருகின்றனர்.
திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை வட்டங்களில், நெடியம், புச்சிரெட்டிபள்ளி, கொத்துார், திருத்தணி பச்சரிசி மலை, புண்ணாக்கு மலை, கன்னிகாபுரம் உள்ளிட்ட, 15க்கும் மேற்பட்ட பகுதிகளில் மலைகள் அமைந்துள்ளன.
அந்த வட்டங்களில், மலை பகுதியை ஒட்டியுள்ள பகுதிகள், வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளன. வனத்துறையினர், மலை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில், அடர்ந்த மரங்களை நட்டு பராமரித்து வருகின்றனர்.
இந்நிலையில், வனப்பகுதிகளில் இருந்து வரும் காட்டுப் பன்றிகள், விளைநிலங்களில் புகுந்து, பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.
அதே போல், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி வட்டாரத்திற்கு உட்பட்ட, ஆரணி மங்களம், புதுப்பாளையம், காரணி, எருக்குவாய், நெல்வாய், பாலவாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும், காட்டுப்பன்றிகளின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து, ஆரணி அடுத்த மங்களம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முனிவேல் கூறியதாவது:
ஆரணி ஆற்றுக்கு அருகில், பெருமாள்பேட்டை கிராமத்தில், 25 ஏக்கர் பரப்பளவில் காய்கறி, நெல், வேர்க்கடலை பயிரிட்டு வருகிறேன்.
இரவு நேரத்தில், அருகில் உள்ள காட்டுப் பகுதிகளில் இருந்து விவசாய நிலங்களில் புகும் காட்டுப்பன்றிகள், நெல் மற்றும் இதர பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனால், நஷ்டம் ஏற்பட்டு பாதிக்கப்படுகிறோம்.
இதுகுறித்து, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்தில் புகார் அளித்தும், வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காததால், நஷ்டம் தொடர்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
கும்மிடிப்பூண்டி ஒன்றியம், சேர்பேடு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சுரேஷ் கூறியதாவது:
கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில், நெல் பயிரிட்ட பின், இதர காலகட்டத்தில் காய்கறி, மக்காச்சோளம், தர்ப்பூசணி உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்களை விளைவித்து வருகிறோம்.
ஆனால், காட்டுப்பன்றிகள் அதிகளவில் வந்து, நாங்கள் விளைவித்த பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனால், விளைச்சல் இல்லாமல், ஆண்டுதோறும் நஷ்டத்தை அனுபவித்து வருகிறோம்.
காட்டுப்பன்றிகளை சுட்டுப்பிடிக்க வேண்டும் என வனத்துறையிடம் முறையிட்டும், அவர்கள் கண்டுகொள்ளவில்லை. மேலும், காட்டுப்பன்றிகளின் தொல்லையில் இருந்து விடுபட, விவசாய நிலங்களில் மின்சார வேலி அமைக்கவும், வனத்துறை முட்டுக்கட்டையாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து, வனத்துறை அலுவலர் ஒருவர் கூறியதாவது:
விளைநிலங்கள் காட்டுப்பன்றிகளால் சேதமடைந்தால், வனத்துறை சார்பில், பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு நிவாரணம் அளித்து வருகிறோம்.
விவசாய நிலங்களில் சுற்றித்திரியும் பன்றிகளை பிடித்து, காட்டுப்பகுதிக்குள் விடப்படும். மேலும், காட்டுப்பகுதியை விட்டு, 3 கி.மீ., துாரத்திற்கு மேல் வரும் காட்டுப்பன்றிகளை சுட்டுப்பிடிப்பது குறித்து, உயர் அதிகாரிகள் தான் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சோலார் மின்வேலி அவசியம் மலை சார்ந்த காப்புக்காடுகளில் வசிக்கும் காட்டுப் பன்றிகள், அதையொட்டிய வயல்வெளிகளில் புகுந்து விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்துகின்றன. நெல், கரும்பு, வேர்க்கடலை உள்ளிட்ட பயிர்கள், காட்டுப்பன்றியின் தாக்குதலுக்கு உள்ளாகின்றன. சேப்பங்கிழங்கு மற்றும் கோலியாஸ் கிழங்கு ரகங்கள் மட்டுமே தப்பிக்கின்றன. ஆனால், இவற்றை அனைத்து நிலப்பரப்பிலும் பயிரிட முடியாது. காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்தும் விதமாக, சோலார் மின்வேலி அமைக்க, வனத்துறை மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். – -எம்.ராஜிவ்காந்தி, ஸ்ரீகாளிகாபுரம்.
