கழிவுநீர், குப்பை கொட்டி தனியார் நிறுவனங்கள் அட்டூழியம்!
கழிவுநீர், குப்பை கொட்டி தனியார் நிறுவனங்கள் அட்டூழியம்!
UPDATED : ஜூலை 16, 2026 09:44 PM
ADDED : ஜூலை 16, 2026 09:31 PM

சோழவரம்:குடியிருப்பு மற்றும் வணிக வளாகங்களின் குப்பை மற்றும் கழிவுநீர் கொட்டப்படுவதால், பாடியநல்லுார் ஏரி நீர் மாசடைந்து வருகிறது. முறையாக கண்காணிக்காமல், நீர்வளத்துறை அதிகாரிகள் அலட்சியமாக இருப்பதாக, அப்பகுதி விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், பாடியநல்லுார் பகுதியில், 293 ஏக்கர் பரப்பு கொண்ட பாசன ஏரி அமைந்து உள்ளது.
ஏரியில் தேங்கும் தண்ணீர், கும்மனுார், சிறுணியம், ஆங்காடு ஆகிய கிராமங்களில் உள்ள, 400 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்களுக்கு பயன்படுவதுடன், நிலத்தடி நீர் பாதுகாப்பிற்கும் உதவுகிறது.
இந்நிலையில், ஏரிக்கு மழைநீர் வரும் கால்வாய்களில், தினமும் இரவு நேரங்களில் குடியிருப்பு மற்றும் வணிக நிறுவனங்களின் கழிவுநீர் கொண்டு வந்து கொட்டப்படுகிறது.
உள்ளூர் மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் இருந்து, டேங்கர் லாரிகளில் இவை கொண்டு வரப்பட்டு, சோழவரம் டோல்கேட் அருகே உள்ள கால்வாயில் விடப்படுகிறது. இந்த கழிவுநீர், ஏரியில் தேங்கியுள்ள தண்ணீருடன் கலந்து, ஏரி நீர் மாசடைந்து வருகிறது.
அதேபோல், பல்வேறு பகுதிகளின் குப்பை கழிவுகளும், ஏரியின் கரையோரங்களில் கொண்டு வந்து கொட்டப்படுகின்றன. பிளாஸ்டிக், ரப்பர் உள்ளிட்டவை எரிக்கப்படும்போது சுற்றுச்சூழல் பாதிக்கப்படுறது.
மீஞ்சூர் - வண்டலுார் வெளிவட்ட சாலை ஏரிக்கரை அருகே இருப்பதால், குப்பை எரிக்கப்படும்போது வாகன ஓட்டிகளும் சிரமத்திற்கும், சுகாதார பாதிப்புகளுக்கும் உள்ளாகின்றனர்.
மேலும், ஏரி முழுதும் ஆகாயத்தாமரை சூழ்ந்து, பராமரிப்பு இன்றி கிடக்கிறது. குப்பை கழிவுகள், கழிவுநீர் மற்றும் ஆகாயத்தாமரை ஆகியவற்றால், ஏரி பாழடைந்து வருகிறது.
அது குறித்து நீர்வளத்துறையினர் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டுவது, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, சோழவரம் அடுத்த பூதுார் கிராமத்தை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் சிவகுமார் கூறியதாவது:
தற்போது, ஏரியில் 65 சதவீதம் அளவிற்கு தண்ணீர் உள்ளது. ஏரியில் குப்பை மற்றும் கழிவுநீர் கொட்டப்படுவதால், அது மாசடைகிறது. இது குறித்து, நீர்வள ஆதாரத்துறையினருக்கு புகார் தெரிவித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.
சுத்திகரிக்கப்படாமல் ஏரியில் விடப்படும் கழிவுநீரில் பாக்டீரியா, வைரஸ்கள் மற்றும் நச்சுகள் அதிகம் இருக்கும். இதனால், நிலத்தடி நீர் பாதிக்கும். பொதுமக்களின் சுகாதாரமும் கோள்விக்குறியாகும்.
அதேபோல், கழிவுகளில் உள்ள கரிம பொருட்கள், ஏரி நீரின் ஆக்சிஜன் அளவை குறைத்து, மீன் மற்றும் பிற நீர்வாழ் உயிரினங்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும்.
எனவே, கழிவுநீரை லாரிகளில் கொண்டுவந்து கொட்டுவதை தடுத்து, ஏரிநீர் மாசடைவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது தொடர்பாக, அங்கு உரிய எச்சரிக்கை பலகைகளையும் வைக்க வேண்டும். பாழாகி வரும் பாடிநல்லுார் ஏரியை பாதுகாக்க, அரசு தொடர் கண்காணிப்பு மற்றும் பராமரிப்பில் ஈடுபட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சோழவரம் நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பல்வேறு பகுதிகளில் இருந்து டேங்கர் லாரிகள் மூலம், கழிவுநீர் கொட்டப்படுவது குறித்து, சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், நீர்வளத்துறை அலுவலர்கள் மூலம், தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. ஏரியில் குப்பை மற்றும் கழிவுநீர் கொட்டுவது சட்டப்படி குற்றமாகும். இதில் ஈடுபடுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
