/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கும்மிடியில் மினி ஸ்டேடியம் அமைக்க வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்பாட்டம்
/
கும்மிடியில் மினி ஸ்டேடியம் அமைக்க வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்பாட்டம்
கும்மிடியில் மினி ஸ்டேடியம் அமைக்க வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்பாட்டம்
கும்மிடியில் மினி ஸ்டேடியம் அமைக்க வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்பாட்டம்
ADDED : டிச 29, 2025 07:34 AM

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி நகரை ஒட்டிய பகுதியில் மினி ஸ்டேடியம் அமைக்க வலியுறுத்தி, விளையாட்டு வீரர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் மினி ஸ்டேடியம் அமைக்க, தமிழக அரசின் சிறப்பு நிதி மற்றும் சட்டசபை உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதி பங்களிப்பில், 3 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
கும்மிடிப்பூண்டி நகரை மையமாக கொண்டு ஸ்டேடியம் அமைக்கப்படும் என, விளைாயாட்டு குழுவினர், எதிர்பார்த்து காத்திருந்தனர்.
ஆனால், நகரில் இருந்து, 15 கி.மீ., தொலைவில் உள்ள பூவலம்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட அமிர்தமங்களம் கிராமத்தில், ஸ்டேடியம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது. இதையறிந்த, குத்து சண்டை, சிலம்பம், வில் வித்தை, தடகளம், கால்பந்து, யோகா உள்ளிட்ட விளையாட்டு குழுவினர், கும்மிடிப்பூண்டி தி.மு.க., - எம்.எல்.ஏ., கோவிந்தராஜன், கலெக்டர் பிரதாப் ஆகியோரிடம் மனு அளித்தனர்.
மனுவில் கூறியிருப்பதாவது:
கும்மிடிப்பூண்டி பகுதியில், 35க்கும் மேற்பட்ட விளையாட்டு குழுவினர் உள்ளனர். பலர் விளையாட்டு பிரிவின் கீழ், வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.
மேலும் நுாற்றுக்கணக்கான வீரர்கள் பல்வேறு விளையாட்டுகளில் தொடர்ந்து சாதனை படைத்து வருகின்றனர்.
அவர்களுக்கு முறையாக பயிற்சி வழங்கிட, கும்மிடிப்பூண்டி நகர் பகுதியில், விளையாட்டு மைதானம் ஏற்படுத்த வேண்டும் என பல ஆண்டு காலமாக அரசிடம் கோரிக்கை விடுத்து வருகிறோம்.
இந்நிலையில், கும்மிடிப்பூண்டிக்கு ஒதுக்கிய மினி ஸ்டேடியம், யாருக்கும் பயன்படாத இடத்தில் அமைய இருப்பதாக தகவல் அறிந்தோம். கும்மிடிப்பூண்டி பகுதி விளையாட்டு குழுவினரை ஊக்குவிக்கும் வகையில், கும்மிடிப்பூண்டி நகரை ஒட்டிய பகுதியில், ஸ்டேடியம் அமைக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் மனுவில் கூறியுள்ளனர்.
இந்நிலையில், விளையாட்டு குழுவினரின் கோரிக்கையை அலட்சியப்படுத்தும் விதமாக, ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட பூவலம்பேடு கிராமத்தில், மினி ஸ்டேடியத்திற்கான கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தகவல் அறிந்த விளையாட்டு குழுவினர் நேற்று கும்மிடிப்பூண்டி பஸ் நிலைத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில், 250க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் மற்றும் வீரங்கனையினர் பங்கேற்றனர். அப்போது, பல்வேறு விளையாட்டு துறையின் பயிற்சியாளர்கள், கும்மிடிப்பூண்டி நகரை ஒட்டிய பகுதியில், மினி ஸ்டேடியம் ஏற்படுத்த வலியுறுத்தி, பேசினர். விளையாட்டு வீரர்கள் கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

