ADDED : ஜூன் 30, 2025 11:17 PM
ஆர்.கே.பேட்டை, ஆட்டோவில் வீடு வரை கொண்டு சென்று இறக்கி விட கூறிய பயணியை, இரும்பு கம்பியால் தாக்கிய ஆட்டோ ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆர்.கே.பேட்டை அடுத்த கோபாலபுரத்தைச் சேர்ந்தவர் ராகுல், 25. இவர், நேற்று முன்தினம் சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றிருந்தார். சிகிச்சை முடிந்து ஆட்டோவில் மீண்டும் கோபாலபுரத்திற்கு திரும்பினார்.
பேருந்து நிறுத்தம் வரை வந்த ஆட்டோ ஓட்டுநர், ராகுலை இறங்கும்படி கூறியுள்ளார். ஆனால், அருகில் உள்ள தன் வீட்டில் இறக்கிவிடும்படி ராகுல் கூறியுள்ளார்.
'கொடுத்த பணத்திற்கு இதுவரை தான் ஆட்டோ வரும். இங்கிருந்து இறங்கி நடந்து செல்லுங்கள்' என, ஆட்டோ ஓட்டுநர் தெரிவித்துள்ளார்.
மேலும், 'வீடு வரை அழைத்து வர நான் என்ன உன்னுடைய வேலைக்காரனா?' என கேட்டு, இரும்பு கம்பியால் ராகுலை தாக்கியுள்ளார். பின், மீண்டும் சோளிங்கர் அரசு மருத்துவமனையிலேயே ராகுல் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஆர்.கே.பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.