ஆட்டோ மோதி மின்கம்பம் சேதம் 5 மணி நேரம் மின்சாரம் துண்டிப்பு
ஆட்டோ மோதி மின்கம்பம் சேதம் 5 மணி நேரம் மின்சாரம் துண்டிப்பு
ADDED : மே 03, 2026 05:02 AM

திருத்தணி: திருத்தணியில் அதிக வேகமாக வந்த ஆட்டோ ஒன் று சாலையோர மின்கம்பத்தில் மோதியதில் மின்கம்பம் சேதடைந்தது. இதனால், அப்பகுதியில், 5 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, சரி செய்யப்பட்டு, பின் மின் இணைப்பு வழங்கப்பட்டது.
திருத்தணி பழைய தர்மராஜா கோவில் தெருவில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இப்பகுதி வீடுகளுக்கு மின்வாரிய துறையினர் மின்கம்பங்கள் அமைத்து மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலை யில், நேற்று மதியம், பழைய தர்மராஜா கோவில் தெருவில் ஆட்டோ ஒன்று அதிகவேகமாக வந்து சாலையோரம் இருந்த மின்கம்பத்தின் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில், மின்கம்பம் சேதம் அடைந்து உடைந்து விழும் அபாய நிலை ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக ஆட்டோ ஓட்டுனர் காயமின்றி உயிர்தப்பினார்.
மேலும் ஆட்டோ ஓட்டுநர் சிறிது நேரத்தில் அங்கிருந்து ஆட்டோவுடன் தப்பிச் சென்றார்.
ஆட்டோ ஓட்டுநர் போதையில் ஆட்டோ ஓட்டி வந்து மின்கம்பத்தில் மோதியுள்ளதாக கூறப்படுகிறது.
தகவல் அறிந்ததும் திருத்தணி மின்வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், 15க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திற்கு வந்து மின்சாரத்தை துண்டித்து, சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி புதிய மின்கம்பம் நடப்பட்டு வீடுகளுக்கு மின்இணைப்பு வழங்கப்பட்டது.
இதனால் அப்பகுதியில், 5 மணி நேரத்திற்கு மேல் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மின்கம்பம் உடைந்து
வீடுகள் மற்றும் சாலையில் விழுந்திருந்தால் பெரிய அளவில் உயிர்சேதம் ஆகியிருக்கும்.
காரணம் இந்த தெருவில், 24 மணி நேரமும் மக்கள் நடமாட்டம் மற்றும் இரு சக்கர வாகனங்கள் அதிகளவில் சென்றவாறு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
