ADDED : டிச 11, 2024 01:17 AM

பொன்னேரி:பொன்னேரி வட்டத்தில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பில், மதுபானம், கள்ளச்சாராயம் மற்றும் போதை தடுப்பு தொடர்பாக, பொன்னேரி, சோழவரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், பொதுமக்களிடம் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.
நேற்று, பொன்னேரி பேருந்து நிலையம், ரயில் நிலையம் பகுதிகளில் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பொன்னேரி தாசில்தார் மதிவாணன், பொன்னேரி கோட்ட கலால் அலுவலர் சுரேஷ்பாபு மற்றும் வருவாய் துறையினர் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
விழிப்புணர்வு பிரசாரத்தின்போது அதிகாரிகள் கூறியதாவது:
மதுவால், துாக்கமின்மை, வயிற்றுப்புண், காசநோய், உயர்அழுத்தம், இதய வீக்கம் ஏற்படுவதுடன், கல்லீரல் பாதிக்கும். மாரடைப்பு ஏற்படும். கண் பார்வை மங்குதல், மூளையும், நரம்பு மண்டலமும் பாதிக்கும்.
மது மனிதனை நோயாளியாக மாற்றி, தற்கொலைக்கு துாண்டும். அகால மரணங்கள் ஏற்படுத்தும் மதுவை தவிர்க்க வேண்டும்.
மதுவில் மயங்கி, மதியை இழக்காதீர். குடித்தவன் மனம் உல்லாசமாக இருக்கும், அதே சமயம் குடும்பத்தின் நிலை திண்டாட்டமாகும். மதுவில் இருந்து மீள விரும்புபவர்களுக்கு தேவையான ஆலோசனைகள் அரசால் வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.