அரசு பள்ளிகளில் அடிப்படை வசதி கணக்கெடுப்பு பணிகள் தொடக்கம்
அரசு பள்ளிகளில் அடிப்படை வசதி கணக்கெடுப்பு பணிகள் தொடக்கம்
ADDED : செப் 08, 2026 06:51 PM
திருத்தணி, செப். 9–
திருத்தணி வருவாய் கோட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில், தேவையான அடிப்படை வசதிகள் குறித்து, பொதுப்பணித்துறை அதிகாரிகள் கணக்கெடுக்கும் பணிகளை தொடங்கியுள்ளனர்.
திருத்தணி வருவாய் கோட்டத்தில், திருத்தணி, ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு, திருவாலங்காடு ஆகிய நான்கு ஒன்றியங்களில், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி என, மொத்தம் 52 பள்ளிகள் இயங்கி வருகின்றன.
இந்நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக, போதிய நிதி ஒதுக்கீடு செய்யாததால், மேற்கண்ட அரசு பள்ளிகளில், குடிநீர், கழிப்பறை மற்றும் கட்டடம் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள முடியவில்லை.
இதனால், பெரும்பாலான அரசு பள்ளிகளில், மாணவர்களுக்கு தேவையான கழிப்பறை, குடிநீர் மற்றும் சுற்றுச்சுவர் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல், மாணவ – மாணவியர் சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பள்ளி தலைமை ஆசிரியர்கள், பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கும், திருத்தணி பொதுப்பணித்துறை அலுவலகத்திற்கும் கடிதம் அனுப்பினர்.
இதையடுத்து, மூன்று ஆண்டுகளுக்கு பின், பள்ளிகளின் பராமரிப்பு மற்றும் அடிப்படை வசதிகளுக்காக, அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
இது குறித்து, திருத்தணி பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
திருத்தணி வருவாய் கோட்டத்தில், 52 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில், குடிநீர், குழிப்பறை, கட்டடத்தின் கூரை பராமரிப்பு உள்ளிட்ட, தேவையான அடிப்படை வசதிகள் குறித்து, பள்ளி தலைமை ஆசிரியர்கள் பட்டியல் தர வேண்டும்.
அதன் பின், படியலின் அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பள்ளிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
