தொடர் மின்வெட்டை கண்டித்து மீஞ்சூரில் பா.ஜ., ஆர்ப்பாட்டம்
தொடர் மின்வெட்டை கண்டித்து மீஞ்சூரில் பா.ஜ., ஆர்ப்பாட்டம்
UPDATED : ஆக 10, 2026 05:21 PM
ADDED : ஆக 10, 2026 02:20 PM
மீஞ்சூர்:மீஞ்சூரில் தொடர் மின்வெட்டை கண்டித்து, பா.ஜ.,வினர் மின் வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு, நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மீஞ்சூரில், சில தினங்களாக அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்படுவதால், குடியிருப்பு மக்கள், வியாபாரிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இதை கண்டித்து, நேற்று மீஞ்சூர் பகுதி பா.ஜ.,வினர், மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு, திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மின்வெட்டு மற்றும் மின்தடை நேரங்களில், தொலைபேசி அழைப்புகளை ஏற்க மறுக்கும் அதிகாரிகளை கண்டித்து, அப்போது கோஷம் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து, மீஞ்சூர் பகுதிக்கு சீரான மின் வினியோகம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, மின் வாரிய உயர் அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கூறியதாவது:
பகல் நேரங்களில் மட்டுமின்றி, இரவு நேரங்களிலும் மின் தடை ஏற்படுவதால் முதியோர், குழந்தைகள், மாணவ - மாணவியர் என, அனைத்து தரப்பினரும் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர்.
இரவு நேரங்களில் ஏற்படும் மின்தடையால் வழிப்பறி, பாலியல் தொல்லை போன்ற குற்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன. மின் வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
