ADDED : டிச 20, 2025 05:47 AM
பொன்னேரி: மின் விபத்துகளை தவிர்க்க, நட்சத்திர குறியீடுள்ள உபகரணங்களை பயன்படுத்தும்படி, மின்வாரியம் துண்டுபிரசுரங்களை வழங்கி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியது.
தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் சார்பில், மின் சிக்கனம் மற்றும் பாதுகாப்பு குறித்து, நேற்று பொன்னேரி கோட்டத்தில், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பொன்னேரி கோட்ட செயற்பொறியாளர் பாண்டியன் தலைமையில், உதவி செயற்பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், மின்வாரிய ஊழியர்கள், பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதில், மின்வாரிய ஊழியர்கள் கூறியதாவது:
ஒவ்வொரு வீட்டிலும் 'எர்த்பைப்' கட்டாயம் அமைக்க வேண்டும். எர்த் சர்க்கியூட் பிரேக்கரை, வீடுகளின் பிரதான சுவிட்ச் போர்டுகளில் பொருத்தினால், மின் கசிவால் ஏற்படும் விபத்தை தவிர்க்கலாம்.
மின் சிக்கனத்திற்கான நட்சத்திர குறியீடு கொண்ட மின்விசிறி, 'ஏசி' பிரிஜ் உள்ளிட்ட மின் சாதனங்களை வாங்கி பயன்படுத்த வேண்டும். வீடுகளில் தேவையில்லாத இடங்களில் மின்விளக்குகளை அணைத்து வைப்பதன் வாயிலாக மின்சாரத்தை சேமிக்கலாம்.
ஒரு யூனிட் மின்சாரம் சேமிப்பு, இரண்டு யூனிட் மின் உற்பத்திக்கு சமம். சூரிய ஒளியில் இயங்கும் வாட்டர் ஹீட்டர்களை வீடுகளில் பொருத்தி மின்சாரத்தை சேமிக்கலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
