ADDED : நவ 29, 2026 05:10 PM
பொன்னேரி: சோழவரம் அருகே, அரசு நிலத்தில் மண் திருட்டிற்கு பயன்படுத்திய பொக்லைன் இயந்திரத்தை, வருவாய்த்துறை அதிகாரிகள் இன்று (நவ.,29) பறிமுதல் செய்தனர்.
சோழவரம் அடுத்த ஆத்துார் கிராமத்தில், அரசு நிலத்தில் அனுமதியின்றி, சட்டவிரோதமாக மண் அள்ளப்பட்டு வருவதாக, வருவாய்த் துறையினருக்கு புகார்கள் வந்தன.
அதையடுத்து, இன்று பொன்னேரி தாசில்தார் ஜெய்கர்பிரபு, சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அங்கிருந்த அரசு நிலத்தில், பொக்லைன் இயந்திரத்தை பயன்படுத்தி, சட்டவிரோதமாக மண் அள்ளப்படுவது தெரிந்தது.
அதிகாரிகளை கண்டதும், மண் கடத்தலில் ஈடுபட்டிருந்தோர், பொக்லைன் இயந்திரத்தை அங்கேயே விட்டுவிட்டு தப்பினர்.
அதையடுத்து, பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் செய்த, தாசில்தார் ஜெய்க்கர்பிரபு சோழவரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
இது தொடர்பாக, சோழவரம் போலீசார் வழக்கு பதிந்து, மண் கடத்தலில் ஈடுபட்டோர் குறித்து விசாரித்து வருகின்றனர்.
