/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கொசஸ்தலை ஆற்றில் பால பணிகள் இறுதிகட்டம் 30 கிராமங்களுக்கு விரைவில் விமோசனம்
/
கொசஸ்தலை ஆற்றில் பால பணிகள் இறுதிகட்டம் 30 கிராமங்களுக்கு விரைவில் விமோசனம்
கொசஸ்தலை ஆற்றில் பால பணிகள் இறுதிகட்டம் 30 கிராமங்களுக்கு விரைவில் விமோசனம்
கொசஸ்தலை ஆற்றில் பால பணிகள் இறுதிகட்டம் 30 கிராமங்களுக்கு விரைவில் விமோசனம்
ADDED : ஜன 21, 2025 12:00 AM

பொன்னேரி, சோழவரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மடியூர், வழுதிகைமேடு, பசுவன்பாளையம், கண்ணியம்பாளையம், புதுகுப்பம், அட்டப்பாளையம், நெற்குன்றம் உள்ளிட்ட, 30க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள் கல்வி, மருத்துவம், தொழில், வியாபாரம் என, பல்வேறு தேவைகளுக்கு, பொன்னேரி வந்து செல்கின்றனர்.
மேற்கண்ட கிராமங்களுக்கும், பொன்னேரி பகுதிக்கும் இடையே கொசஸ்தலை ஆறு பயணிக்கிறது. மேற்கண்ட கிராமங்களின் தொடர் கோரிக்கையின் பயனாக, மடியூர் --- நாலுார் கம்மவார்பாளையம் கிராமங்கள் இடையே, கொசஸ்தலை ஆற்றில், 18.50 கோடி ரூபாயில் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன.
கடந்த 2022ம் ஆண்டு, ஜூலை மாதம், இதற்கான கட்டுமான பணிகள் துவங்கப்பட்டு, ஆற்றில், ஒன்பது இடங்களில் கான்கிரீட் துாண்கள், அதன் மீது, 210 மீ. நீளம், 12 மீ. அகலத்தில் ஓடுபாதை அமைக்கப்பட்டன.
ஓடுபாதை, இருபுறமும் நடைபாதை, பக்க வாட்டு தடுப்பு சுவர், மழைநீர் செல்வதற்கு கால்வாய் உள்ளிட்ட பணிகள் முடிக்கப்பட்டு உள்ளன.
தற்போது இறுதிகட்டமாக, இருபுறமும், 300 மீ. தொலைவிற்கு இணைப்பு சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்காக இருபுறமும் சரளை கற்கள் கொட்டி, சமன்படுத்தப்பட்டு வருகிறது. இப்பணிகள் அடுத்த சில தினங்களில் முடித்து, மக்கள் பயனுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த உயர்மட்ட பாலமானது, பொன்னேரி - -திருவொற்றியூர் மற்றும் சீமாவரம் - காரனோடை ஆகிய நெடுஞ்சாலைகளை இணைக்கும் வகையில் அமைகிறது.
இது குறித்து உயர்மட்ட பால கட்டுமான பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது:
உயர்மட்ட பாலத்திற்கான பெரும்பாலான பணிகள் முடிந்துவிட்டன. இருபுறமும் இணைப்பு சாலைக்காக சரளை கற்கள் கொட்டி தயார்படுத்தப்படுகிறது. அங்கு தற்காலிக சாலை அமைத்து, அதன் மீது கிராமவாசிகளின் வாகனங்கள் செல்ல அனுமதிக்க உள்ளோம்.
அப்போதுதான், இணைப்பு சாலை உறுதியாகும். அதன்பின், தார் சாலை அமைத்து, நிரந்தர மாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

