/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பி.டி.ஓ., அலுவலகம் முற்றுகை தார் உருக்கும் ஆலைக்கு தடை
/
பி.டி.ஓ., அலுவலகம் முற்றுகை தார் உருக்கும் ஆலைக்கு தடை
பி.டி.ஓ., அலுவலகம் முற்றுகை தார் உருக்கும் ஆலைக்கு தடை
பி.டி.ஓ., அலுவலகம் முற்றுகை தார் உருக்கும் ஆலைக்கு தடை
ADDED : ஆக 18, 2025 11:44 PM

கும்மிடிப்பூண்டி, கும்மிடிப்பூண்டி பி.டி.ஓ., அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டதை தொடர்ந்து, அனுமதியின்றி இயங்கிய தார் உருக்கும் ஆலைக்கு தடை விதித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை மீது, பி.டி.ஓ., தரப்பில் கடிதம் வழங்கப்பட்டது.
கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம் அருகே, சூரப்பூண்டி ஊராட்சியில் ராமசந்திராபுரம் கிராமம் அமைந்துள்ளது. இங்கு, 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இங்குள்ள பழைய குடோன் ஒன்றில், இரு மாதங்களுக்கு முன் தார் உருக்கும் ஆலை துவக்கப்பட்டது. இந்த ஆலையால், சுவாச பிரச்னை உள்ளிட்ட பல்வேறு உடல்நல பாதிப்புக்கு குழந்தைகள் முதல் முதியோர் வரை ஆளாகின்றனர்.
அனுமதியின்றி இயங்கும் இந்த ஆலைக்கு தடைவிதிக்க கோரி, கடந்த ஜூலை மாதம், 29ம் தேதி, கிராம மக்கள் சார்பில் முற்றுகை போராட்டம் நடத்தி, பி.டி.ஓ., அலுவலகத்தில் மனு வழங்கப்பட்டது. 'களஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்' என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, நேற்று கும்மிடிப்பூண்டி பி.டி.ஓ., அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர். கும்மிடிப்பூண்டி பி.டி.ஓ., அமிழ்தமன்னன் பேச்சு நடத்தினார். பின், கிராம மக்களுக்கு கடிதம் ஒன்றை வழங்கினார்.
அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது:
நேரடி கள ஆய்வு செய்ததில், மேற்படி நிறுவனம் ஊராட்சி ஒன்றியத்தின் வாயிலாகவோ, ஊராட்சியில் இருந்தோ எவ்வித வரைபட அனுமதியும் பெறாமல் இயங்கியது தெரியவந்தது. அதனால், சம்பந்தப்பட்ட தொழிற்சாலை ஊழியர்களிடம், 'உரிய அனுமதியின்றி இயங்க கூடாது' என, தெரிவித்து பணிகள் நிறுத்தப்பட்டன.
ஊராட்சி அனுமதியின்றி மீண்டும் இயங்கினால், தமிழ்நாடு ஊராட்சி சட்டத்தின்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதை தொடர்ந்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.