ADDED : ஜன 05, 2026 05:16 AM
திருவாலங்காடு: மணவூரில், தி.மு.க., கிளை செயலர் வீட்டில், பீரோவை உடைத்து, 3.5 சவரன் நகை, திருடப்பட்டது.
மணவூர் ஊராட்சி ரயில் நிலையம் அருகே வசிப்பவர், பன்னீர் செல்வம், 53. மணவூர் தி.மு.க., கிளை செயலராக உள்ளார். இவர், நேற்று முன்தினம் இரவு, காஞ்சிபுரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு குடும்பத்துடன் சென்றார்.
நேற்று காலை திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, பீரோ திறந்து கிடந்தது.
அதில் வைக்கப்பட்டிருந்த, 3.5 சவரன் நகை, 75,000 ரூபாய், 200 கிராம் வெள்ளி பொருட்கள், 50 கிலோ எடையிலான பித்தளை பொருட்கள் திருடுபோனது தெரியவந்தது.
பன்னீர் செல்வம், திருவாலங்காடு போலீசில் புகார் அளித்தார். போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து விசாரிக்கின்றனர்.
