மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர் பெயர், சின்னம் பொருத்தம்
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர் பெயர், சின்னம் பொருத்தம்
ADDED : ஏப் 17, 2026 02:47 AM

திருவள்ளூர்: திருவள்ளூர் தொகுதியில் போட்டியிடும் 14 வேட்பாளர்களின் பெயர், சின்னம் பொருத்தும் பணி நடைபெற்றது.
திருவள்ளூர் சட்டசபை தொகுதியில், தி.மு.க., - அ.தி.மு.க., உள்ளிட்ட 14 பேர் போட்டியிடுகின்றனர். திருவள்ளூர் தொகுதியில், 335 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. வரும் 23ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
ஓட்டுச்சாவடிகளுக்கு தேவையான மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், திருவள்ளூர் ஜே.என்.சாலையில் உள்ள தனியார் பள்ளியில் அமைக்கப்பட்ட, 'ஸ்ட்ராங் ரூமில்' பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில், சட்டசபை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பெயர், சின்னம் பொருத்தும் பணி நேற்று, ஜெ.என்.சாலையில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் நடந்தது. வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில், அப்பணி நடைபெற்றது.
தேர்தல் நடத்தும் அலுவலரும், வருவாய் கோட்டாட்சியருமான ரவிச்சந்திரன் தலைமையில், தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் சின்னம், பெயர் பொருத்தும் பணியில் ஈடுபட்டனர்.
அப்பணி முடிவடைந்ததும், மீண்டும் அனைத்து மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களும், 'ஸ்ட்ராங் ரூமில்' பாதுகாப்பாக வைக்கப்பட்டது.
தேர்தல் நடைபெறும் தினத்திற்கு முன்தினம், அனைத்து மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களும், அந்தந்த ஓட்டுச்சாவடிகளுக்கு, போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட உள்ளது.
