UPDATED : மே 02, 2026 11:00 PM
ADDED : மே 02, 2026 10:21 PM
திருவள்ளூர்:தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களுக்கு, உரிய ஆவணம் சமர்ப்பிக்காத, 14 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை பொதுத்தேர்தலை முன்னிட்டு, கடந்த மார்ச் 15 முதல், தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டன. திருவள்ளூர் தேர்தல் மாவட்டத்திற்கு உட்பட்ட, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருத்தணி, திருவள்ளூர், பூந்தமல்லி, ஆவடி, மதுரவாயல், அம்பத்துார், மாதவரம் மற்றும் திருவொற்றியூர் ஆகிய, 10 தொகுதிகளில், உரிய ஆவணங்களின்றி மற்றும் சந்தேகத்திற்கிடமான வகையில் எடுத்து செல்லப்படும் பணம் மற்றும் மதிப்புமிக்கப் பொருட்கள் ஆகியவற்றை, தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
அதன்படி, திருவள்ளுர் மாவட்டத்திற்குட்பட்ட 10 சட்டசபை தொகுதிகளில், 17 கோடியே 70 லட்சத்து 30,547 ரூபாய் பணமாகவும், 73 கோடியே 58 லட்சத்து 28,713 மதிப்புமிக்க பொருட்களாகவும், இதர வகையிலான 5 கோடியே 81 லட்சத்து 38,293 ரூபாய் மதிப்புள்ள பொருட்களாகவும் பறிமுதல் செய்யப்பட்டன.
பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் மதிப்புமிக்கப் பொருட்கள் உள்ளிட்டவற்றிற்கு, சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் உரிய ஆவணங்களுடன் மேல்முறையீடு செய்யப்பட்டதில், 16 கோடியே 94 லட்சத்து 79,342 ரூபாய் பணம், மதிப்புமிக்கப் பொருட்கள் 73 கோடியே 9 லட்சத்து 93,756 மற்றும் இதர வகையிலான பொருட்கள் 5 கோடியே 64 லட்சத்து 39,113 ரூபாய் பொருட்கள் விடுவிக்கப்பட்டன.
உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கக் கோரி ஐந்து மனுக்கள் பரிசீலனையிலும், உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்காத 14 பேர் மீது, சம்பந்தப்பட்ட சட்டசபை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்களால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன.
