/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நில பிரச்னையில் தகராறு இருவர் மீது வழக்கு பதிவு
/
நில பிரச்னையில் தகராறு இருவர் மீது வழக்கு பதிவு
ADDED : ஆக 08, 2025 10:29 PM
திருவள்ளூர்:நில பிரச்னையில் ஏற்பட்ட தகராறில், கொலை மிரட்டல் விடுத்த இருவர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
திருவள்ளூர் அடுத்த புட்லுார், ராமாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராம்குமார், 44. சென்னையில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவருக்கு, திருவள்ளூர் ஜே.என்., சாலையில், சர்வே எண் 87/2பி பகுதியில், 20 சென்ட் நிலம் உள்ளது.
இதன் அருகே, வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்த பாஸ்கர், 45, என்பவருக்கு, 30 சென்ட் நிலம் உள்ளது.
இந்நிலையில், திருவள்ளூர் சார் - பதிவாளர் அலுவலகத்தில், தனக்கு சொந்தமான நிலத்தில் பாதி ஆக்கிரமிக்கப்பட்டு, முறைகேடாக பாஸ்கர் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டிருப்பது, ராம்குமாருக்கு தெரியவந்தது.
இதையடுத்து, திருவள்ளூர் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த ராம்குமார், அந்த இடத்தில் கட்டுமானப் பணி மேற்கொள்ள தடை உத்தரவு பெற்றுள்ளார்.
இந்நிலையில், கடந்த 6ம் தேதி காலை, தனக்கு சொந்தமான இடத்தில் பள்ளம் தோண்டி, கட்டட பணி மேற்கொண்டு வந்த ஆண்ட்ரூஸ் என்பவரிடம், ராம்குமார் வாக்குவாதம் செய்துள்ளார்.
ஆனால், பாஸ்கர் சொல்லித்தான் பணி செய்வதாகவும், இந்த இடத்தில் தலையிட்டால் அடியாட்களை வைத்து கொலை செய்து விடுவதாகவும் ஆண்ட்ரூஸ் மிரட்டியுள்ளார்.
இதுகுறித்து, ராம்குமார் அளித்த புகாரின்படி, பாஸ்கர், ஆண்ட்ரூஸ் ஆகிய இருவர் மீதும், திருவள்ளூர் நகர போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.