/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகள்
/
திருத்தணி சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகள்
ADDED : ஜன 23, 2025 01:43 AM

திருத்தணி:திருத்தணி நகராட்சியில், 21 வார்டுகள் உள்ளன. இங்குள்ள முக்கிய சாலைகளான அரக்கோணம் சாலை, சித்துார் சாலை, ம.பொ.சி.சாலை, பேருந்து நிலையம் சாலை மற்றும் பைபாஸ் ஆகிய பகுதிகளில், 24 மணி நேரமும் வாகனங்கள் சென்றவாறு இருக்கும்.
இந்நிலையில், மேற்கண்ட சாலைகளில், 30க்கும் மேற்பட்ட மாடுகள் பகல் மற்றும் இரவு நேரங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித் திரிவதும், சாலையில் படுத்து ஓய்வெடுப்பதும் வாடிக்கையாக உள்ளது.
இந்த கால்நடைகளால் அடிக்கடி வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி தவிக்கின்றனர். கலெக்டரும் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து கோ சாலையில் ஒப்படைக்க வேண்டும். மேலும் மாடுகளின் உரிமையாளர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்க வேண்டும் என, நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.
தொடர்ந்து நகராட்சி கமிஷனர் பாலசுப்ரமணியம், கடந்த வாரம் மாடுகளின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கியும், சாலையில் மாடுகளை சாலையில் திரியவிடக்கூடாது என, எச்சரித்தார்.
இருப்பினும், கால்நடைகளின் உரிமையாளர்கள் கமிஷனர் எச்சரிக்கையை காற்றில் பறக்கவிட்டு, தங்களது மாடுகளை நகராட்சியில் மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் பேருந்து நிலைய சாலைகளில் சுற்றித்திரிய விடுகின்றனர்.
இதனால், போக்குவரத்துக்கு பாதிப்பு மற்றும் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கி படுகாயம் அடைகின்றனர்.
எனவே, கலெக்டர், திருத்தணி நகராட்சியில் ஆய்வு நடத்தி,சுற்றித்திரிய விடும் மாடுகளின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

