ADDED : மார் 14, 2026 05:58 AM

ஆர்.கே.பேட்டை: திருவள்ளூர் மாவட்டத்தின் மேற்கில் உள்ள ஆந்திர மாநில எல்லை பகுதியில், போலீசார் 'சிசிடிவி' கேமரா பொருத்தி கண்காணித்து வருகின்றனர்.
ஆர்.கே.பேட்டை தாலுகா காட்டூர், தேவலாம்பாபுரம், புதுார்மேடு உள்ளிட்ட பகுதிகளை ஒட்டி, ஆந்திர மாநிலம் சித்துார் மாவட்ட எல்லை துவங்குகிறது.
சித்துார் மாவட்டத்தில் இருந்து போதை பொருட்கள் கடத்தி வருவதை தடுப்பதற்காக, புதுார் மேடு, தேவலாம்பாபுரம், காட்டூர் உள்ளிட்ட இடங்களில், சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த சோதனைச்சாவடிகளையும் தாண்டி சிலர் கடத்தலில் ஈடுபடுகின்றனர்.
அவர்களை போலீசார், ரோந்து பணியின் போது கண்டறிந்து வழக்கு பதிந்து வருகின்றனர்.
இந்நிலையில், சட்டசபை தேர்தலை முன்னிட்டு, எல்லை பகுதியில் கண்காணிப்பை மேலும் தீவிரப்படுத்தும் வகையில், தற்போது 'சிசிடிவி' கேமரா பொருத்தியுள்ளனர்.
கம்பியில்லா இணைப்பு வசதியுடன் அமைக்கப்பட்டுள்ள 'சிசிடிவி' கேமரா வாயிலாக, ஆர்.கே.பேட்டை காவல் நிலையத்தில் இருந்து, எல்லை பகுதியை தொடர்ந்து கண்காணிக்க முடியும் என, போலீசார் தெரிவித்துள்ளனர்.
