sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

திருமுல்லைவாயிலில் வெடித்து சிதறிய ரசாயன பேரல்கள் பதற்றம் பள்ளிக்குள் தீ பரவியதால் அலறியடித்து ஓடிய மாணவர்கள்

/

திருமுல்லைவாயிலில் வெடித்து சிதறிய ரசாயன பேரல்கள் பதற்றம் பள்ளிக்குள் தீ பரவியதால் அலறியடித்து ஓடிய மாணவர்கள்

திருமுல்லைவாயிலில் வெடித்து சிதறிய ரசாயன பேரல்கள் பதற்றம் பள்ளிக்குள் தீ பரவியதால் அலறியடித்து ஓடிய மாணவர்கள்

திருமுல்லைவாயிலில் வெடித்து சிதறிய ரசாயன பேரல்கள் பதற்றம் பள்ளிக்குள் தீ பரவியதால் அலறியடித்து ஓடிய மாணவர்கள்


ADDED : பிப் 20, 2025 09:46 PM

Google News

ADDED : பிப் 20, 2025 09:46 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆவடி:ஆவடி அடுத்த திருமுல்லைவாயிலில் உள்ள, 'தின்னர்' கிடங்கில், ரசாயன பேரல்கள் வெடித்து சிதறி, பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதன் தாக்கத்தால், அருகில் உள்ள தனியார் பள்ளியின் வகுப்பறை, ஆய்வறை உள்ளிட்டவை சேதமடைந்தன. பள்ளியில் இருந்த மாணவ - மாணவியர், பீதியில் அலறயடித்து ஓடினர். குழந்தைகளை தேடி பெற்றோரும் குவிந்தனர்.

சென்னை ஆவடியை அடுத்த திருமுல்லைவாயில், பத்மாவதி நகரைச் சேர்ந்தவர் சார்லஸ், 60. இவர், திருமுல்லைவாயில், சுதர்சன் நகரில் 2,400 சதுர அடியில் தகர ஷீட் வேயப்பட்ட வாடகை கட்டடத்தில், 14 ஆண்டுகளாக, 'ஆலியா கெமிக்கல்ஸ்' என்ற பெயரில் 'தின்னர், பெயின்ட் ரிமூவர்' மொத்த விற்பனை கிடங்கு நடத்தி வருகிறார்.

இதன் அருகே, இரண்டு தனியார் பள்ளிகள், தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, திருமண மண்டபம், சிமென்ட், கட்டட பொருட்கள் விற்கும் ஹார்டுவேர்ஸ், இரும்பு கம்பெனி மற்றும் மர கம்பெனி ஆகியவை உள்ளன.

கிடங்கில் இருந்து, அம்பத்துார் தொழிற்பேட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பெயின்ட் மற்றும் இரும்பு கம்பெனிகளுக்கு, பேரலில் தின்னர் மற்றும் ரசாயனம் வினியோகிக்கப்படுகிறது.

நிறுவன உரிமையாளர் சார்லஸ், தொழில்ரீதியாக பெங்களூரு சென்றிருந்தார். ஊழியர்களான கணக்காளர், லோடுமேன், டிரைவர் ஆகிய மூவர் மட்டும், நேற்று கிடங்கில் இருந்தனர். கிடங்கில், 60 பேரல்களில், 8,000 லிட்டர் தின்னர் இருந்துள்ளது.

இந்நிலையில், மதியம் 12:00 மணிக்கு, சரக்கு வாகனத்தில் லோடு ஏற்றியபோது, பேரல்கள் உராய்ந்ததில் தின்னர் கசிந்து, அதனுடைய வெப்பநிலை அதிகரித்து, திடீரென தீப்பற்றி எரிய துவங்கியது. ஊழியர்கள், தீயை அணைக்க முயன்றனர். ஆனால் சிறிது நேரத்தில், தீ மளமளவென கிடங்கு முழுதும் பரவியது.

அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், உடனடியாக கிடங்கில் இருந்து அலறியடித்து வெளியேறினர்.

அங்கிருந்த, 60 ரசாயன பேரல்கள் அடுத்தடுத்து வெடித்ததில், கிடங்கில் வெடிகுண்டு போட்டதை போல், பெரும் புகைமூட்டம் எழுந்தது. இதை, 5 கி.மீ., சுற்று வட்டாரத்தில் உள்ளோரால் எளிதில் காண முடிந்தது.

தகவலறிந்த ஆவடி, அம்பத்துார், பூந்தமல்லி, ஜே.ஜே., நகர், வில்லிவாக்கம், மதுரவாயல் மற்றும் ஆவடி எச்.வி.எப்.,பில் உட்பட எட்டு இடங்களில் இருந்து, மதியம் 12:30 மணியில் இருந்து தீயணைப்பு வாகனங்கள், 20 குடிநீர் லாரிகள் வரவழைக்கப்பட்டு, தீயை அணைக்கும் பணி முடுக்கிவிடப்பட்டது.

சென்னை புறநகர் மாவட்ட அலுவலர் தென்னரசு தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் 50 பேர், தீயை கட்டுப்படுத்தும் ரசாயன நுரையை பீய்ச்சியடித்து, மூன்று மணி நேரம் போராடி, மதியம் 3:30 மணியளவில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

ரசாயனத்தின் உஷ்ணத்தை கூட பொருட்படுத்தாமல், வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில், நிறுவனத்தில் உள்ளே இருந்த 'டி.வி.எஸ்., அப்பாச்சி' பைக், 'மகேந்திரா பொலீரோ' சரக்கு வாகனம், 'ஏசி' மற்றும் டேபிள், நாற்காலிகள் உட்பட கிடங்கு முழுதும் தீக்கிரையாகின.

கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில், வெடித்து சிதறிய பேரல்கள், அருகில் உள்ள மங்களம் வித்யாஷ்ரம் தனியார் பள்ளியின் பின்புற சுவர்கள், ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து சேதமாக்கின.

ரசாயன வெடி அனலில், மூன்றாவது மாடியில் உள்ள அரங்கம் மற்றும் இரண்டாவது மாடியில் உள்ள நுாலகத்தின் மேற்பூச்சு, மேஜை, நாற்காலிகள் மற்றும் புத்தகங்கள் தீயில் எரிந்தன. முதல் மாடியில் இருந்த ஆய்வகம் மற்றும் தரைத்தளத்தில் 6ம் வகுப்பு வகுப்பறை சேதமடைந்தன.

அதேபோல், பள்ளி வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஊழியர்களின் 'ஹீரோ ஸ்பிளெண்டர், டி.வி.எஸ்., ஸ்கூட்டர்' ஆகிய பைக்குகள் மற்றும் ஐந்து சைக்கிள்கள் தீயில் கருகின. சப் - இன்ஸ்பெக்டர்கள் கனகராஜ், கிரி தலைமையிலான, 100க்கும் மேற்பட்ட போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த தீ விபத்தில், மொத்தம் 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்திருக்கலாம் என, போலீசார் தெரிவித்தனர். பள்ளி அருகில் கம்பெனி நடத்த எப்படி அனுமதி கிடைத்தது; உரிய அனுமதி பெற்றுத் தான் கிடங்கு இயங்கி வருகிறதா என்பது குறித்து, வழக்கு பதிந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திடீரென அதிபயங்கர சத்தம் கேட்டது. நாங்கள் பீதியில் வெளியே வந்து பார்த்தபோது, கிடங்கு வெடித்து சிதறி, தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. அருகில் இருந்த மரக்கடை, இரும்பு கடையில் கரும்புகை சூழ்ந்தது. நாங்கள் அனைவரும் அங்கிருந்து உடனே வெளியேறியதால், விபத்தில் இருந்து தப்பித்தோம்.

- பக்கத்து கடைக்காரர்கள்

நடவடிக்கை உண்டு

தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு, போராடி தீயை அணைத்தனர். பள்ளி அருகே இது போன்ற நிறுவனம் செயல்படக்கூடாது. ரசாயன கிடங்கு உரிமையாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

- நாசர்,

அமைச்சர்

பள்ளிக்கு இன்று விடுமுறை


ரசாயன கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து, துரிதமாக செயல்பட்ட நிறுவன கணக்காளர் தணிகாசலம், 42, கிடங்கு பின்புறம் உள்ள மங்களம் வித்யாஷ்ரம் பள்ளி நிர்வாகத்திற்கு, உடனே தகவல் தெரிவித்தார்.சம்பவம் நடந்தபோது, மதிய உணவு இடைவேளை என்பதால், அங்கு எல்.கே.ஜி., முதல் பிளஸ் 2 வரை பயிலும், 450 மாணவ - மாணவியர் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
சாப்பிட்டு கொண்டிருந்த உணவை அப்படியே மேசை மீது விட்டுவிட்டு, அலறியடித்து மாணவ - மாணவியர் வெளியே ஓடினர்.சிலர், அருகில் உள்ள வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர். பீதியில், பெற்றோரும் பள்ளியில் குவிந்தனர். மாணவர்கள், பெற்றோருடன் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர்.இதனால், அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
தீ விபத்தால், பள்ளிக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.பள்ளி மற்றும் விபத்து நடந்த பகுதியை, அமைச்சர் நாசர், பள்ளி அலுவலர்கள் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.ஆவடி மாநகராட்சி சார்பில், நான்கு ஆம்புலன்ஸ் வாகனங்களில், 12 பேர் உடைய இரண்டு மருத்துவ குழுவினர் தயார் நிலையில் இருந்தனர்.








      Dinamalar
      Follow us