/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தரைப்பாலம் சீரமைப்பில் அலட்சியம் கரையோர கிராம மக்கள் கடும் அதிருப்தி
/
தரைப்பாலம் சீரமைப்பில் அலட்சியம் கரையோர கிராம மக்கள் கடும் அதிருப்தி
தரைப்பாலம் சீரமைப்பில் அலட்சியம் கரையோர கிராம மக்கள் கடும் அதிருப்தி
தரைப்பாலம் சீரமைப்பில் அலட்சியம் கரையோர கிராம மக்கள் கடும் அதிருப்தி
ADDED : அக் 13, 2025 01:29 AM

பள்ளிப்பட்டு:கொசஸ்தலை ஆற்று வெள்ளத்தால் அடிக்கடி தரைப்பாலங்கள் சேதமடைந்து வருகின்றன. எனவே, நிரந்தர தீர்வு காண அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், கரையோர கிராம மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
பள்ளிப்பட்டு அருகே உருவாகும் கொசஸ்தலை ஆறு, மேலப்பூடி, சொரக்காய்பேட்டை, நெடியம் வழியாக பாய்கிறது.
இந்த தண்ணீர், நல்லாட்டூரை கடந்து பூண்டி நீர்த்தேக்கத்தை அடைகிறது. கொசஸ்தலை ஆற்றுக்கு ஆந்திர மாநிலம், புல்லுார் காப்புக்காடில் இருந்தும், கிருஷ்ணாபுரம் அணையில் இருந்தும் நீர்வரத்து உள்ளது.
கடந்த 2012ல், சொரக்காய்பேட்டை - நெடியம் இடையே, கொசஸ்தலை ஆற்றில் தரைப்பாலம் கட்டப்பட்டது. இந்த தரைப்பாலத்திற்கு இரும்பு கம்பிகள் பயன்படுத்தப்படாததால், தொடர்ந்து இடிந்து வருகிறது. கடந்த 2021ல், தற்காலிகமாக மண் கொட்டி சீரமைக்கப்பட்டது.
தரைப்பாலத்தின் மைய பகுதியில், தற்போது பாலம் உடைந்து தொங்கி கொண்டிருக்கிறது. எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. ஆனாலும், இப்பாலத்தின் வழியாக வாகனங்கள் தொடர்ந்து பயணித்து வருகின்றன.
அதே போல், நெடியத்திற்கு அருகே சாமந்தவாடா - ஞானம்மாள்பட்டடை இடையே, கொசஸ்தலையில் கட்டப்பட்டுள்ள தரைப்பாலமும், நெடியம் தரைப்பாலம் போல் சேதம் அடைந்து வருகிறது.
ஏற்கனவே, மணல் மூட்டைகளால் தற்காலிகமாக சீரமைக்கப்பட்ட தரைப்பாலம், கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அடித்து செல்லப்பட்டது.
இதனால், சாமந்தவாடாவில் போக்குவரத்து முடங்கி உள்ளது.
மழைக்காலத்தில் தொடர்ந்து இடிந்து விழும் தரைப்பாலங்களை நிரந்தரமாகவும், உறுதியாகவும் சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளாததால், கொசஸ்தலை கரையோர கிராம மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.