ADDED : ஏப் 14, 2024 11:21 PM

ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டை ஒன்றியம், வீரமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்டது வீரமங்கலம் அருந்ததி காலனி. இங்கு, 100 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
கிராமத்தின் வடமேற்கில், 30,000 லிட்டர் கொள்ளளவு மேல்நிலை குடிநீர் தொட்டி உள்ளது. இந்த தொட்டி பராமரிப்பு இன்றி இடிந்து விழும் நிலையில் உள்ளது.
மேல்நிலை குடிநீர் தொட்டியின் துாண் உருக்குலைந்து இடிந்து விழுந்து வருகிறது. குடிநீர் தொட்டி எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. அருகில் வசிப்பர்கள் அச்சத்தில் தவித்து வருகின்றனர். இந்த குடிநீர் தொட்டியை பாதுகாப்பாக இடித்து அகற்றி, புதிய குடிநீர் தொட்டி கட்ட வேண்டும் என, பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.
சீரமைக்கப்படாத மகளிர் சுகாதார வளாகம்
கடம்பத்துார் ஒன்றியம், கீழச்சேரி ஊராட்சி. இங்குள்ள காலனி பகுதியில், பெண்கள் பயன்பாட்டிற்காக, 20 ஆண்டுகளுக்கு முன், 5.50 லட்சம் ரூபாய் மதிப்பில், ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டது.
இந்த மகளிர் சுகாதார வளாகம், கடந்த ஒன்பது, பத்து ஆண்டுகளுக்கு முன், சேதமடைந்தது.
இதை சீரமைக்க கோரி ஊராட்சி நிர்வாகம் மூலம் ஒன்றிய நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புதிய மகளிர் சுகாதார வளாகம் கட்டி கொடுக்க வேண்டுமென, இப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
