/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ரயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க கலெக்டர் உத்தரவு
/
ரயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க கலெக்டர் உத்தரவு
ரயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க கலெக்டர் உத்தரவு
ரயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க கலெக்டர் உத்தரவு
ADDED : நவ 05, 2025 01:29 AM

செவ்வாப்பேட்டை: நவ. 5-: சென்னை - அரக்கோணம் ரயில்வே மார்க்கத்தில், கடவுப்பாதை - 13, 14, 15 உள்ளிட்ட இடங்களில், 108.1 கோடி ரூபாயில் திருத்திய மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென, கலெக்டர் பிரதாப் உத்தரவிட்டார்.
சென்னை -- அரக்கோணம் ரயில்வே மார்க்கத்தில், அம்பத்துார், ஆவடி, திருநின்றவூர், வேப்பம்பட்டு, செவ்வாப்பேட்டை, திருவாலங்காடு வழியாக, புறநகர் மற்றும் விரைவு, சரக்கு ரயில்கள் என, 300க்கும் மேற்பட்ட முறைகள் கடந்து செல்கின்றன.
கடவுப்பாதை மூடப்படும்போது, 15 முதல் அரைமணி நேரம் வரை வாகன ஓட்டிகள் காத்திருக்கின்றனர். சில சமயங்களில், ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத அவலநிலை உள்ளது.
கடவுப்பாதை - 13 சென்னை - அரக்கோணம் மார்க்கத்தில், கடவுப்பாதை எண் - 13ல், 2011 -- 12ம் ஆண்டு, 28.72 கோடி ரூபாய் மதிப்பில், 18 துாண்களுடன் மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டு, மேம்பாலம் அமைக்கும் பணி, 2018ல் நிறைவடைந்தது.
ஆனால், நெடுஞ்சாலை பகுதியில், 2018 ஆண்டு 8.5 மீட்டர் அகலம், 800 மீட்டர் நீளத்தில் துவங்கப்பட்ட மேம்பால பணிகள், ஆறு ஆண்டுகளாகியும் எவ்வித பணிகளும் நடைபெறாமல் கிடப்பில் போடப் பட்டது.
தற்போது, திருத்தி அமைக்கப்பட்ட திட்ட மதிப்பீட்டின்படி, 56 கோடி ரூபாயில் பணி துவங்கி நடந்து வருகிறது.
கடவுப்பாதை - 14 ரயில்வே கடவுப்பாதை எண் - 14ல் உள்ள வேப்பம்பட்டு ரயில் நிலையத்தில், 2009-ம் ஆண்டில், 29.5 கோடி ரூபாயில் மேம்பாலம் அமைக்கும் பணியை ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டது.
கடந்த 2012-ம் ஆண்டு நெடுஞ்சாலைத் துறையால் துவங்கப்பட்ட பணி, அப்பகுதி மக்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கால் தடைபட்டது.
கடந்த 2022 டிசம்பர் மாதம் வழக்கு வாபஸ் பெறப்பட்டதையடுத்து, தற்போது திருத்தியமைக்கப்பட்ட திட்டத்தின் படி, 44 கோடி ரூபாய் மதிப்பில் பணி நடந்து வருகிறது.
கடவுப்பாதை - 15 கடவுப்பாதை - 15ல், செவ்வாப்பேட்டை ரயில் நிலையத்தின் அருகே, 2015-ம் ஆண்டு 20 கோடி ரூபாயில் மேம் பாலம் கட்டும் பணி துவங்கியது. 60 சதவீதம் முடிவடைந்த நிலையில், 10 ஆண்டுகளாக பணி கிடப்பில் போடப் பட்டது.
தற்போது திருத்தியமைக்கப்பட்ட மதிப்பீட்டின் படி, 8.11 கோடி ரூபாயில், கடந்த ஆகஸ்ட் மாதம் பணி துவங்கி நடந்து வருகிறது.
இந்நிலையில், 108 கோடியில் திருத்தி அமைக்கப்பட்ட நிதியின் கீழ் நடந்து வரும் மேம்பால பணிகளை, நேற்று கலெக்டர் பிரதாப், நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள் உள்ளிட்ட அதிகாரி களுடன் ஆய்வு மேற்கொண்டார்.
அதன்பின், 'விரைவில் மேம்பால பணிகளை முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கலெக்டர் உத்தர விட்டார்.

