நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகம் முற்றுகை போராட்டம்
நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகம் முற்றுகை போராட்டம்
ADDED : பிப் 11, 2025 12:20 AM

திருவள்ளூர், பொன்னேரி நகராட்சி மற்றும் மீஞ்சூர் பேரூராட்சியுடன் ஊராட்சிகள் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கிராமவாசிகள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நகராட்சியுடன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தடப்பெரும்பாக்கம் ஊராட்சியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர், கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
பின், கலெக்டரிடம் வழங்கிய மனு:
தடப்பெரும்பாக்கம் ஊராட்சியில், 660 பேர், நுாறு நாள் வேலை திட்டத்தில் பதிவு செய்துள்ளோம். இதில், 409 பேர் தொடர்ச்சியாக பணிபுரிந்து வருகின்றனர். அரசிடம் தொகுப்பு வீடுகள் வேண்டி விண்ணப்பித்து உள்ளோம். நகராட்சியுடன் இணைக்கப்பட்டால், அந்த ஊராட்சி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.
இதுகுறித்து, கிராம சபை கூட்டத்தில், தீர்மானம் நிறைவேற்றி அரசிடம் அளித்துள்ளோம். எங்களின் கோரிக்கையை ஏற்று, தடப்பெரும்பாக்கம் ஊராட்சியை பொன்னேரி நகராட்சியுடன் இணைக்கக் கூடாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பள்ளிப்பட்டு அடுத்துள்ள சூரராஜப்பட்டடை கிராமத்தைச் சேர்ந்த, 50க்கும் மேற்பட்டோர், நேற்று, கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனு:
சூரராஜப்பட்டடை ஊராட்சியை, பேரூராட்சியுடன் இணைத்தால், விவசாய நிலங்கள் மனைகளாக மாற்றப்பட்டு, விவசாய தொழில் கடுமையாக பாதிக்கப்படும்.
நிலமற்ற விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்து, சென்னை உள்ளிட்ட மாநகரங்களுக்கு தினக்கூலியாக செல்ல வேண்டிய நிலை ஏற்படும்.
வீட்டு வரி, சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டணம் பல மடங்கு அதிகரித்தால், மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவர். நுாறு நாள் வேலை திட்டம், இலவச கால்நடை வழங்கும் திட்டம் உள்ளிட்ட அரசு நலத்திட்ட உதவி எதுவும் எங்களுக்கு கிடைக்காது.
எனவே, எங்கள் ஊராட்சியை, பேரூராட்சியுடன் இணைக்கக் கூடாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
