/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி கோவிலில் பிரம்மோற்சவம் துவக்கம்
/
திருத்தணி கோவிலில் பிரம்மோற்சவம் துவக்கம்
ADDED : பிப் 15, 2024 11:45 PM

திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாத பிரம்மோற்சவ விழா விமர்சையாக நடந்து வருகிறது. 12 நாட்கள் நடக்கும் விழாவில் உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன், தினமும் காலை, இரவு நேரத்தில் ஒவ்வொரு வாகனத்தில் மாடவீதியில் திருவீதியுலா வந்து அருள்பாலிப்பார்.
நடப்பாண்டின் மாசி மாத பிரம்மோற்சவ விழா நேற்று முன்தினம் இரவு விநாயகர் திருவீதியுலாவுடன் துவங்கியது.
நேற்று காலை, 7:30 மணிக்கு உற்சவர் முருகபெருமான் இந்திர வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து, மாடவீதியில் ஒரு முறை வலம் வந்தார்.
காலை, 8:00 மணிக்கு உற்சவர் கொடி மரத்தின் எதிரே உற்சவர் முருகப்பெருமான் வந்தார். சிறப்பு தீபாராதனை முடிந்ததும், கொடியேற்றம் நிகழ்ச்சி நடந்தது.
இதில் கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் ஸ்ரீதரன், இணை ஆணையர் ரமணி, அறங்காவலர்கள் சுரேஷ்பாபு, நாகன், கண்காணிப்பாளர் சித்ராதேவி மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.
தினமும் காலை மற்றும் இரவு உற்சவர் முருகர் ஒவ்வொரு வாகனத்தில் தேர்வீதியில் உலா வந்து அருள்பாலிக்கிறார். வரும், 21ம் தேதி மரத்தேர் திருவிழா, 22ம் தேதி வள்ளி திருமணம் நடக்கிறது. 24ம் தேதி கொடி இறக்கம், தீர்த்தவாரியுடன் விழா நிறைவு பெறுகிறது.
lராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் யோக நரசிம்ம சுவாமி மலைக்கோவிலின் உற்சவர் சன்னிதி சோளிங்கர் நகரில் அமைந்துள்ளது. இங்கு, பக்தோசித பெருமாள் அருள்பாலிக்கிறார். மாசி மாதம் ரத சப்தமி கொண்டாடப்பட்டு வருகிறது. பிப்., 16ம் தேதியான இன்று ரத சப்தமி உற்சவத்தில், காலையில் சூரிய பிரபையில் எழுந்தருளும் பக்தோசித பெருமாள், மாலை சந்திர பிரபை வாகனத்தில் எழுந்தருளுகிறார். இதை தொடர்ந்து வரும் 20ம் தேதி முதல் 22ம் தேதி வரை தவண உற்சவம் நடைபெற உள்ளது.
இந்த உற்சவத்தின் போது தினசரி காலை 7:00 மணிக்கு உற்சவர் புறப்பாடு நடைபெறும்.