/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
!தேர்தலை கண்காணிக்க குழு நியமனம் பறக்கும் படை: பதற்ற ஓட்டுச்சாவடிகள் நேரடி கண்காணிப்பு
/
!தேர்தலை கண்காணிக்க குழு நியமனம் பறக்கும் படை: பதற்ற ஓட்டுச்சாவடிகள் நேரடி கண்காணிப்பு
!தேர்தலை கண்காணிக்க குழு நியமனம் பறக்கும் படை: பதற்ற ஓட்டுச்சாவடிகள் நேரடி கண்காணிப்பு
!தேர்தலை கண்காணிக்க குழு நியமனம் பறக்கும் படை: பதற்ற ஓட்டுச்சாவடிகள் நேரடி கண்காணிப்பு
ADDED : மார் 17, 2024 11:01 PM
திருவள்ளூர் மாவட்டத்தில், லோக்சபா தேர்தல் முன்னேற்பாடு குறித்து, மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர் பிரபுசங்கர் கூறியதாவது:
லோக்சபா தொகுதிக்கான வேட்பு மனுக்கள், வரும் 20 - 27 வரை, கலெக்டர் அலுவலகத்தில் முதல் தளத்தில் அமைந்துள்ள தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் கலெக்டர் அறையில், வேலை நாட்களில் காலை 11:00 - மாலை 3:00 மணி வரை பெறப்படும்.
திருவள்ளூர் மாவட்டத்தில், 281 ஓட்டுச் சாவடிகள் பதற்றமானவை மற்றும் ஆறு ஓட்டுச் சாவடிகள், மிகவும் பதற்றமானவை என கண்டறியப்பட்டு உள்ளன.
ஓட்டுப்பதிவு நாளன்று, இந்த ஓட்டுச் சாவடிகள், நேரடி ஒளிபரப்பு வாயிலாக, மாவட்ட, மாநில கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஓட்டுப் பதிவுக்கு தேவையான பொருட்களை வழங்க, மண்டல அலுவலர், உதவி மண்டல அலுவலர் மற்றும் உதவியாளர் என, தலா மூன்று பேர் கொண்ட 306 மண்டல குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஓட்டுப்பதிவிற்காக, 9,119 ஓட்டுப்பதிவு இயந்திரம், 4,821 கட்டுப்பாட்டு கருவி மற்றும் யாருக்கு ஓட்டு அளித்தோம் என்பதை காட்டும் கருவி தயார் நிலையில் உள்ளது.
தேர்தல் நன்னடத்தை விதியை அமல்படுத்த, 24 மணி நேரமும் கண்காணிப்பு பணி மேற்கொள்ள, 90 பறக்கும் படை, 90 நிலை கண்காணிப்பு குழு, 20 காணொளி கண்காணிப்பு குழு, 10 காணொளி பார்வையாளர் குழு மற்றும் வேட்பாளர் செலவினங்களை கண்காணிக்க, 10 உதவி செலவின பார்வையாளர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவினருக்கு, ஜி.பி.எஸ்., கருவி பொருத்தப்பட்ட, வாகன வசதி ஏற்பாடு செய்து தரப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, குழுவினரின் பணிகள், மாவட்ட மற்றும் மாநில கட்டுப்பாட்டு அறைகள் வாயிலாக, கண்காணிக்கப்படும்.
வேட்பாளர்கள், பொதுக்கூட்டம், ஊர்வலம் மற்றும் தற்காலிக கட்சி அலுவலகம் அமைத்தல் போன்றவற்றுக்கு அனுமதியை 48 மணி நேரத்திற்கு முன்னதாக, இந்திய தேர்தல் ஆணையத்தின், http://suvidha.eci.gov.in என்ற இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் நிர்வாகிகள், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் மற்றும் வேட்பாளரின் முகவர்கள் ஆகியோர், இந்த இணையதளத்திலோ அல்லது நேரடியாகவோ விண்ணப்பிக்கலாம்.
தேர்தல் விதிமீறல் குறித்து பொதுமக்கள், 'C-Vigil' என்ற மொபைல் செயலி வாயிலாக புகார் அளிக்கலாம்.
புகாரின் விபரம், புகைப்படம், வீடியோ மற்றும் விதிமீறல் நடைபெறும் இடம் உடனடியாக, மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிய வரும். மேற்படி புகார் சம்பந்தப்பட்ட தொகுதி பறக்கும் படை குழுவினருக்கு நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும். இதை 'கூகுள் பிளே ஸ்டோரில்' பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
திருவள்ளூர் மாவட்டத்தில், 87 பேர் துப்பாக்கி வைத்துக் கொள்ள உரிமம் பெற்றுள்ளனர். அவர்கள் அனைவரும் தங்களிடம் உள்ள துப்பாக்கிகளை, அருகில் உள்ள காவல் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும்
இவ்வாறு அவர் கூறினார்.
கட்டுப்பாட்டு அறை
திருவள்ளூர் மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான சந்தேகம் மற்றும் புகார் தெரிவிக்க கலெக்டர் அலுவலகத்தில், 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், 044 - 27660641, 27660642, 27660643, 27660644 மற்றும் இலவச எண் 1800 425 8515 ஆகிய தொலைபேசிகளில் தொடர்பு கொள்ளலாம்.

