
பழுதடைந்த மின்கம்பம் மாற்றப்படுமா?
திருத்தணி நகராட்சி, கண்ணாபிரான் நகர் பகுதியில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் 20க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் நடப்பட்டுள்ளன. மின் கம்பங்களை முறையாக பராமரிக்காததால் தற்போது மின்கம்பம் ஒன்றின் சிமென்ட் பெயர்ந்து, இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. மின்கம்பம் உடைந்து விழும் அபாய நிலை உள்ளது. எனவே, இனியாவது, மின்வாரிய அதிகாரிகள் பழுதடைந்த மின்கம்பத்தை அகற்றி, புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும்.
- -கே.நாகராஜன், திருத்தணி.
மணவாள நகரில்
நாய்கள் தொல்லை
திருவள்ளூர் அடுத்த மணவாள நகர், நேரு தெருவில் நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. சாலையில் செல்வோரையும், சைக்கிளில் செல்லும் மாணவ, மாணவியரையும் நாய்கள் விரட்டுகின்றன. தெரு நாய்கள் அப்பகுதிவாசிகளை கடிப்பதற்குள், வெங்கத்துார் ஊராட்சி நிர்வாகம் தெருவில் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கே.பாஸ்கர், மணவாள நகர்.
சேதமடைந்த சாலை
சீரமைக்கப்படுமா?
திருவாலங்காடு ஒன்றியம், அத்திப்பட்டு ஊராட்சியில் இருந்து ராமலிங்காபுரம் செல்லும் 2 கி.மீ., தார்ச்சாலை சேதமடைந்து உள்ளது. இந்த சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத அளவு தார் பெயர்ந்து ஜல்லி சிதறி பல்லாங்குழி சாலையாக மாறியுள்ளது.
இதனால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். இச்சாலையை சம்பந்தப்பட்ட துறையினர் சீரமைக்க வேண்டும்.
- க.உசேன், அத்திப்பட்டு.

