
சென்னைக்கு இரவு நேரத்தில்
பேருந்துகள் இயக்கப்படுமா?
திருத்தணி பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை கோயம்பேடு மற்றும் கிளாம்பாக்கம் ஆகிய பகுதிகளுக்கு, குறைந்த அளவில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. காலை நேரத்தில், அரசு பேருந்துகள், 10க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
மாலை, 6:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரை இரண்டு பேருந்துகள் மட்டுமே சென்னைக்கு நேரடியாக இயக்கப்படுகின்றன. அதன் பின் சென்னைக்கு பயணியர் செல்வதற்கு இரண்டு கி.மீ., துாரம் நடந்து சென்று, திருத்தணி பைபாஸ் ரவுண்டானா பகுதியில் இருந்து திருப்பதி--- - சென்னை செல்லும் பேருந்துகளில் பயணம் செய்கின்றனர். எனவே பயணியர் நலன் கருதி, கூடுதல் அரசு பஸ்கள் இயக்க வேண்டும்.
- -எம்.பிரவீன்குமார், திருத்தணி.
சேதமடைந்த தொட்டியை
அகற்ற வேண்டும்
திருவாலங்காடு ஒன்றியம் பெரியகளக்காட்டூர் கிராமத்தில், 2,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.
இப்பகுதிவாசிகளின் பயன்பாட்டிற்காக வி.ஏ.ஓ., அலுவலகம் எதிரே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி 4 ஆண்டுகளாக பழுதடைந்த நிலையிலும் பயன்பாட்டில் உள்ளது.
இதன் நான்கு துாண்களும், சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து, தொட்டியின் அடிபாகம் சேதமடைந்து விரிசல்அடைந்து மோசமான நிலையில் உள்ளது.
இதனால் அவ்வழியே செல்வோர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் சிமென்ட் பூச்சுகள் விழுந்து விபத்தை ஏற்படுத்துமோ என்ற அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
இத்தகைய ஆபத்தான நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சீரமைக்க பி.டி.ஓ., அலுவலக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காதது, பகுதிவாசிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
எனவே, அபாய நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- உ. குமார், திருவாலங்காடு.
தாடூர் சாலை சீரமைக்கப்படுமா?
திருத்தணி ஒன்றிம் தாடூர் ஊராட்சி, இ.என்.கண்டிகை - தாடூர் காலனி வரை அமைக்கப்பட்ட சாலை குண்டும், குழியுமாக மாறிவிட்டது.
தினமும், பள்ளி, கல்லுாரிக்கு செல்வோர், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். தாடூர் கிராமத்தில் உள்ள சிவன் கோவிலில், அவ்வப்போது வழிபாடு நடத்தப்படுவதால், அருகில் உள்ள கிராமவாசிகள் இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர். பராமரிப்பில்லாமல் சேதமடைந்த இச்சாலையை, ஒன்றிய நிர்வாகம் சீரமைக்க வேண்டும்.
- -பி.கோதண்டபாணி, தாடூர்.