
பழுதான மின்கம்பங்கள் மாற்றப்படுமா?
திருத்தணி ஒன்றியம், அலுமேலுமங்காபுரம் கிராமம் அருகே ஏரிக்கரை சாலை பகுதியில் உள்ள வயல்வெளியில் இரண்டு மின்கம்பங்கள் சேதம் அடைந்துள்ளன. மின்கம்பத்தின் சிமென்ட் தளம் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன.
பலத்த காற்று அடித்தால் இரண்டு மின்கம்பங்களும் உடைந்து விழும் அபாய நிலை உள்ளது. மின்கம்பம் பழுதடைந்துள்ளதால் விவசாயிகள் அச்சத்துடன் விவசாய பணிகளை மேற்கொள்கின்றனர். எனவே அசம்பாவிதம் நடக்கும் முன் மின்வாரிய ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு பழுதடைந்த மின்கம்பங்களை அகற்றி, புதிய மின்கம்பங்கள் பொருத்த வேண்டும்.
-பி.கோதண்டன், அலுமேலுமங்காபுரம்.
மின்விளக்குகள் பொருத்தப்படுமா?
திருத்தணி நகரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் கட்டுப்படுத்த கடந்த, நான்கு மாதங்களுக்கு முன், 36 கோடி ரூபாயில், சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை பட்டாபிராமபுரம் பகுதியில் இருந்து திருத்தணி- அரக்கோணம் மாநில நெடுஞ்சாலை வள்ளியம்மாபுரம் பகுதிக்கு புதியதாக பைபாஸ் சாலை அமைத்து பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளன.
இச்சாலையில் எம்.ஜி.ஆர்.நகர் பகுதியில், ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டு, அந்த பாலத்தில் மீது வாகனங்கள் செல்கிறது.
இந்நிலையில் மேம்பாலத்தின் மீது மின்விளக்குகள் அமைக்கப்படாததால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. எனவே, பைபாஸ் சாலையில் மின்விளக்கு பொருத்த வேண்டும்.
-அ.முனுசாமி, திருத்தணி.
கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை
ஊத்துக்கோட்டை பேருந்து நிலையத்தில் இருந்து தினமும் கோயம்பேடிற்கு ஒரு பேருந்து மட்டும் இயக்கப்படுகிறது. இதுவும் புத்துாரில் இருந்து ஊத்துக்கோட்டை வரும்போது பயணியர் அதிகளவில் உள்ளனர். நின்று கொண்டும், படிக்கட்டில் தொங்கிக் கொண்டு செல்ல வேண்டி உள்ளது.
எனவே, ஊத்துக்கோட்டையில் இருந்து கோயம்பேடிற்கு கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-என்.ராகவேந்தர், ஊத்துக்கோட்டை.
பயணியர் நிழற்குடை சேதம்
மீஞ்சூர் - மணலி வழித்தடத்தில், கவுண்டர்பாளையம் பகுதியில் உள்ள பயணியர் நிழற்குடை சேதம் அடைந்து இருக்கிறது. ஓட்டை உடைசல்களுடன் விழும் நிலையில் இருப்பதால், பயணியர் யாரும் அதன் உள்ளே செல்ல தயங்குகின்றனர்.
இதனால் பேருந்திற்கு காத்திருக்கும்போது மழை, வெயிலில் சிரமத்திற்கு ஆளாகின்றனர். நிழற்குடை விழுந்து அசம்பாவிதங்களை நேரிடும் வாய்ப்பும் உள்ளது. உடனடியான அதை அகற்றிவிட்டு, புதியது அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எஸ். ஜெகன், மீஞ்சூர்.