/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
புகார் பெட்டி : திருவாலங்காடுக்கு பஸ் வேண்டும்
/
புகார் பெட்டி : திருவாலங்காடுக்கு பஸ் வேண்டும்
ADDED : டிச 31, 2024 01:13 AM

திருவாலங்காடு ஒன்றியத்துக்கு உட்பட்டது பூனிமாங்காடு, நல்லாட்டூர், அரும்பாக்கம், நெமிலி, மாமண்டூர் உள்ளிட்ட ஊராட்சிகள். இந்த ஊராட்சிகளுக்கு உட்பட்டு, 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
இந்த பகுதியினர், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், வேளாண் அலுவலகம், வட்டார கல்வி அலுவலகம் உள்ளிட்டவற்றிற்கு செல்ல, திருவாலங்காடு வரை பயணம் செய்ய வேண்டி உள்ளது.
எனவே, பூனிமாங்காடு -- திருவாலங்காடுக்கு பேருந்து சேவை இயக்கும்பட்சத்தில், மேற்கண்ட 30 கிராமத்தினர் பயன் பெற முடியும். அதிகாரிகள் பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சி.மாரிமுத்து, நெமிலி.
கால்நடை தொழுவமான
நுாலகம்
திருவாலங்காடு ஒன்றியம், இலுப்பூர் ஊராட்சியில், கிராம நிர்வாக அலுவலகம் அருகே அமைந்துள்ளது கிளை நுாலகம். 100க்கும் மேற்பட்ட வாசகர்கள் உள்ளனர். இந்நிலையில் நுாலக கட்டடத்தை சிலர் கால்நடைகளை கட்டும் தொழுவமாக மாற்றியுள்ளனர். இதனால், வைக்கோல், மாட்டுச்சாணங்கள் குவிந்து நுாலகத்தில் துர்நாற்றம் வீசுவதாக வாசகர்கள் புலம்புகின்றனர்.
எனவே இதை தடுக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- எல்.முத்துராமன், இலுப்பூர்.
பராமரிப்பு
இல்லாத நிழற்குடை
சோழவரம், ஜி.என்.டி., சாலையில், வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரே உள்ள பயணியர் நிழற்குடை பராமரிப்பு இன்றி உள்ளது. இருக்கைகள் மற்றும் சோலார் மின்விளக்கு உபகரணங்கள் மாயமாகி உள்ளன. குப்பை கழிவுகள்குவிந்து இருக்கின்றன.
இதனால் பயணியர் நிழற்குடையை பயன்படுத்த முடியாத நிலையில் மழை, வெயில் நேரங்களில், அவர்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். பயணியர் நிழற்குடையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எம். முரளி, சோழவரம்.
சாலையோரம்
கழிவு குவிப்பு
சென்னை -- கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையோரம், தச்சூர் அடுத்த, புதுரோடு சந்திப்பில் இருந்து, சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு செல்லும் சாலை பிரிகிறது. அந்த சந்திப்பு பகுதியில் உள்ள கடைகளின் கழிவு, இணைப்பு சாலையோரம் குவிக்கப்பட்டு வருகிறது.
அங்கு பேருந்துக்காக காத்திருக்கும் சிறுவாபுரி பக்தர்களை முகம் சுளிக்க வைக்கும் வகையில் கழிவு பரவி கிடக்கின்றன. சின்னம்பேடு ஊராட்சி நிர்வாகத்தினர் சாலையோரம் குப்பை குவிக்கப்படுவதை தவிர்க்க முறையாக கடைகளின் குப்பை கழிவை சேகரித்து, புதுரோடு சந்திப்பு பகுதயை துாய்மையாக பராமரிக்க வேண்டும்.
- ஆர்.கமலநாதன், கும்மிடிப்பூண்டி.