
கொசு மருந்து அடிக்கப்படுமா?
திருத்தணி நகராட்சியில் காந்தி ரோடு மெயின் மற்றும் காந்தி ரோடு மூன்று சந்து தெருக்கள் ஆகிய இடங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
மேற்கண்ட பகுதிகளில் கழிவுநீர் கால்வாய் பல இடங்களில் புதைந்தும், கழிவுநீர் தேங்கி நிற்கிறது.
இதனால் நாளுக்கு நாள் கொசுக்கள் அதிகரித்து வருகிறது. பகல் நேரத்திலேயே கொசுக்கள் அதிகளவில் உள்ளது.
குறிப்பாக இரவு கொசுக்கடியால் மேற்கண்ட பகுதி மக்கள் நிம்மதியக துாங்க முடியவில்லை. மேலும் பலர் காய்ச்சலால் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே நகராட்சி நிர்வாகம் மேற்கண்ட இடங்களில் கால்வாயில் தேங்கி கழிவுநீரை அகற்றி கால்வாய் சீரமைத்து, கொசு மருந்து தெளித்தும், புகை அடித்தும் கொசுக்களை அழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
- - -க.விநாயகம், திருத்தணி.
தச்சூர் மேம்பாலத்தில்
வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
சென்னை -- கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கவரைப்பேட்டை அடுத்த தச்சூர் கூட்டு சாலை சந்திப்பின் மீது, மேம்பாலம் ஒன்று உள்ளது. கடந்த டிசம்பர் மாதம் பெய்த மிக கனமழையின் போது, அந்த மேம்பாலத்தின் சாலைகள் பழுதானது.
குறிப்பாக சென்னை நோக்கி செல்லும் திசையில் உள்ள மேம்பாலம் சாலை முழுதும் குண்டும் குழியுமாக மாறியது. இதனால், அந்த மேம்பாலத்தை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் அனைவரும் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர்.
வேகமாக செல்லும் வாகனங்கள் முதலில் தடுமாற்றம் அடைந்து பின் சுதாரித்து வேகத்தை கட்டுப்படுத்த வேண்டி இருப்பதால், வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்து வருகின்றனர். தேசிய நெடுஞ்சாலை ஆணையம், உடனடியாக தச்சூர் மேம்பாலத்தில் பழுதான சாலையை சீரமைக்க வேண்டும்.
-எஸ்.சதானந்தன், கும்மிடிப்பூண்டி.

