/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கிளாம்பாக்கம் - கோயம்பேடுக்கு எம்.டி.சி., வெளியூர் பேருந்துகள் இயக்கத்தில் குழப்பம்
/
கிளாம்பாக்கம் - கோயம்பேடுக்கு எம்.டி.சி., வெளியூர் பேருந்துகள் இயக்கத்தில் குழப்பம்
கிளாம்பாக்கம் - கோயம்பேடுக்கு எம்.டி.சி., வெளியூர் பேருந்துகள் இயக்கத்தில் குழப்பம்
கிளாம்பாக்கம் - கோயம்பேடுக்கு எம்.டி.சி., வெளியூர் பேருந்துகள் இயக்கத்தில் குழப்பம்
ADDED : ஜன 15, 2024 12:14 AM

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தங்கியுள்ள வெளியூர்காரர்கள், இரு நாட்களாக அவரவர் சொந்த ஊர்களுக்கு படையெடுத்தனர்.
இதனால், சமீபத்தில் திறக்கப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில், இரண்டு நாட்களாக கூட்டம் அலைமோதியது.
இங்கு, வெளியூர் பயணியருக்கு சரியான வழிகாட்டுதல், போதிய பேருந்துகள் இல்லாததால், குடும்பத்தினருடன் வந்த பயணியர் பல மணி நேரம் காத்திருந்து அவதிப்பட்டனர். இதனால், நடத்துனர் - பயணியரிடையே தகராறு ஏற்பட்டது.
மோதல்
கிளாம்பாக்கம் அரசு போக்குவரத்து கழக நடைமேடையில், நேற்று முன்தினம் இரவு, முன்பதிவு செய்த பயணியர் மட்டுமே பேருந்தில் ஏற அனுமதிக்கப்பட்டனர்.
முன்பதிவு செய்யப்பட்ட, விரைவு போக்குவரத்து கழக பேருந்துகள் மட்டுமே கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படுகின்றன; விழுப்புரம், கும்பகோணம் உள்ளிட்ட கோட்ட பேருந்துகள் வழக்கம்போல், கோயம்பேடு உட்பட தற்காலிக பேருந்து நிலையங்களில் இருந்து இயக்கப்படுவதை அறியாத முன்பதிவு செய்யாத பயணியர், கிளாம்பாக்கத்தில் நேற்று முன்தினம் மாலை முதல் குவிந்தனர்.
இதனால், முன்பதிவு செய்யாத பயணியரை, விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் ஏற்ற, நடத்துனர்கள் கெடுபிடி செய்தனர்.
திண்டிவனம், விழுப்புரம், விக்கிரவாண்டி, உளுந்துார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லவிருந்த பயணியர், பேருந்தில் ஏற்றப்படவில்லை. இதனால், நடத்துனர்களுக்கும், பயணியருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அதேநேரத்தில், சில வெளியூர் பேருந்துகள் கிளாம்பாக்கம் நிலையத்திற்குள் செல்லாமல், ஜி.எஸ்.டி., சாலையிலேயே நிறுத்தி, முன்பதிவு செய்தோரை வரவழைத்து ஏற்றிச் சென்றன.
இதனால், பேருந்து ஊழியர்கள் - பயணியர் இடையே தகராறு முற்றி மோதலாகவும் மாறியது. அந்நேரத்தில் பலரும் மறியலில் ஈடுபட்டனர். போலீசார் வந்து அவர்களை சமாதானப்படுத்தினர்.
நேற்று காலையில், கூட்டம் குறைந்திருந்தது. ஆனாலும், நேற்று முன்தினம் இரவு போன்று, சில பேருந்துகளில் இதே நிலைமை நீடித்தது.
திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருச்சி, சேலம் பேருந்துகள் அடிக்கடி இயக்கப்பட்டதால், அப்பேருந்து பயணியருக்கு பாதிப்பு இல்லை. ஆனால், கும்பகோணம் பேருந்து போதிய அளவில் இயக்கப்படாததால், பயணியர் ஆத்திரமடைந்து, போக்குவரத்து கழக அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கும்பகோணம் பேருந்து வரும் போதெல்லாம், லக்கேஜ், குழந்தைகளுடன் ஓடி, 'சீட்' பிடிக்க குடும்பத்தினர் அலைமோதினர்.
புதுச்சேரி, திருவாரூர் ஆகிய இடங்களுக்கு பல மணி நேரம் பேருந்து இல்லாததாலும், முறையாக வழிகாட்டுதல் இல்லாததலும், குடும்பத்தினருடன் பலர் காத்து கிடந்தனர்.
அதேசமயம், முன்பதிவு பேருந்துகள், கிளாம்பாக்கத்திற்கு மாற்றப்பட்டதை அறியாத முன்பதிவு செய்த பயணியர், கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு நேற்று வந்தனர்.
அவர்கள், பேருந்தை தவறவிடக்கூடாது என்பதற்காக, இங்கிருந்து கிளாம்பாக்கத்திற்கு எம்.டி.சி., சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. 18 - 60 கட்டணத்தில் அப்பேருந்துகள் இயக்கப்பட்டதால், அவர்கள் அதிருப்தி அடைந்தனர்.
நேற்று ஒரே நாளில், 4,000 சர்வீஸ், இரு பேருந்து நிலையங்களுக்கு இயக்கப்பட்டன. இது, பயணியர் அலைக்கழிப்புக்கு சான்றாகவே அமைந்துள்ளது.
தவிர, கோயம்பேடில் இருந்து, கோட்ட பேருந்துகள் சீரான முறையில் இயக்கப்பட்டதால், வெளியூர் சென்ற பயணியருக்கு பாதிப்பு இல்லை.
கடந்த 12ம் தேதி முதல் நேற்று வரை, ரயில்கள், அரசு மற்றும் தனியார் ஆம்னி பேருந்துகள் என, 10 லட்சம் பேர், சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு சென்றுள்ளனர்.