/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ரயிலை கவிழ்க்க சதி திட்டம்? மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு
/
ரயிலை கவிழ்க்க சதி திட்டம்? மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு
ரயிலை கவிழ்க்க சதி திட்டம்? மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு
ரயிலை கவிழ்க்க சதி திட்டம்? மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு
ADDED : ஏப் 26, 2025 09:55 PM
திருவாலங்காடு:சென்னை ---- அரக்கோணம் ரயில் மார்க்கத்தில் திருவாலங்காடு ரயில் நிலையம் அமைந்துள்ளது. திருவாலங்காடு --- மோசூர் ரயில் நிலையத்திற்கு இடையே அரிசந்திராபுரம் என்னும் இடத்தில் விரைவு ரயில்கள் செல்லும் 4-வது தண்டவாளத்தில் நேற்று முன்தினம் அதிகாலை 1:14 மணிக்கு திடீரென சிக்னல் கட்டானது.
இதையடுத்து சிக்னல் பிரிவில் பணி செய்யும் ரயில்வே ஊழியர் செந்தில்குமார் துண்டிக்கப்பட்ட இடத்தை பார்வையிட்டார்.
அப்போது தண்டவாளத்தில் 'ரிவர்ஸ் லாக் ராட்' கழன்று சிக்னல் கட்டானதும், அங்கிருந்த போல்டுகளை நாச வேலைக்காரர்கள் கழற்றி எடுத்துச்சென்றதும் தெரிந்தது.
உடனடியாக திருவாலங்காடு ரயில் நிலைய அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சென்னை நோக்கி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மின்சார ரயில் செல்லும் பாதையில் திருப்பி விடப்பட்டது. இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
தகவல் அறிந்து சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். பின் தண்டவாளம் மற்றும் சிக்னல் இணைப்புகளை ரயில்வே ஊழியர்கள் சீரமைத்து 9 மணி நேரத்திற்கு பின் பிற ரயில்கள் இயக்கப்பட்டன.
இதுகுறித்து ரயில்வே பாதுகாப்பு படையினர், ரயில்வே போலீசார் மற்றும் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் என 3 தனிப்படைகள் அமைத்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில் திருவலாங்காடு ரயில் நிலைய அதிகாரி தணிகைமலை அளித்த புகாரின்படி அரக்கோணம் ரயில்வே போலீசார், ரயிலை கவிழ்க்க சதி செய்தல், பொது சொத்துக்களை சேதப்படுத்துதல், பொதுமக்கள் உயிருக்கு அச்சுறுத்தும் வகையில் சதி செய்தல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு அருகில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவு அடிப்படையில் அரிச்சந்திராபுரம், சின்னம்மாபேட்டை, வியாசபுரம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட நபர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.