/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பொன்னை மேம்பால கட்டுமானம் விறுவிறு! 90 சதவீத பணிகள் முடிந்தன
/
பொன்னை மேம்பால கட்டுமானம் விறுவிறு! 90 சதவீத பணிகள் முடிந்தன
பொன்னை மேம்பால கட்டுமானம் விறுவிறு! 90 சதவீத பணிகள் முடிந்தன
பொன்னை மேம்பால கட்டுமானம் விறுவிறு! 90 சதவீத பணிகள் முடிந்தன
ADDED : பிப் 13, 2024 06:21 AM

வேலுார் மாவட்டம், பொன்னை நகரை ஒட்டி, பொன்னை ஆறு பாய்கிறது. ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டத்தில் இருந்து பொன்னை ஆற்றுக்கு நீர்வரத்து உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் இருந்து பொன்னை வழியாக சித்துார் செல்லும் வாகனங்கள், பொன்னை ஆற்றின் குறுக்கே, கடந்த 45 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பாலத்தின் வழியாக பயணித்து வருகின்றன.
மாற்று வழி
இந்த பாலம், 2020ல் பெய்த கனமழையின் போது, முற்றிலும் இடிந்தது. இதனால், இந்த வழியாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால், வாகனங்கள் மேல்பாடி வழியாக மாற்று வழியில், 10 கி.மீ., துாரம் சுற்றி சென்று வந்தன.அதை தொடர்ந்து இந்த தரைப்பாலம் சீரமைக்கப்பட்டு தற்போது போக்குவரத்துக்கு பயன்பட்டு வருகிறது.
பொன்னை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது எல்லாம், தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்குவதும், அதனால், போக்குவரத்து துண்டிக்கப்படுவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது.
தரைப்பாலம் வழியாக போக்குவரத்து துண்டிக்கப்படும் போது, பொன்னையில் இருந்து காட்பாடி மற்றும் ஆந்திர மாநிலம் சித்துார் மார்க்கமாக பயணிக்க பகுதிவாசிகள் பாதிக்கப்படுகின்றனர்.
இந்த பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் பகுதிவாசிகள் தங்களின் அன்றாட தேவைக்காக, காட்பாடி வழியாக வேலுாருக்கும், ஆந்திர மாநிலம் சித்துாருக்கும் தினசரி பயணித்து வருகின்றனர். மேலும், பொன்னை அரசு மருத்துவமனையில் இருந்து மேல்சிகிச்சைக்காக, வேலுார் செல்வோரும் இந்த பாலத்தின் வழியாக பயணிக்க வேண்டிய நிலை உள்ளது.
நிரந்தர தீர்வு
தரைப்பாலம் வெள்ளத்தால் பாதிக்கப்படுவதால், போக்குவரத்து துண்டிக்கப்படுவதில் இருந்து நிரந்தர தீர்வு எட்டும் விதமாக, பொன்னை ஆற்றின் குறுக்கே, 40 கோடி ரூபாய் மதிப்பில், புதிய மேம்பாலம் கட்ட திட்டமிடப்பட்டது. 2022ல் இதற்கான பணிகள் துவங்கின.
பொன்னை ஆற்று பாலத்தின் கிழக்கு பகுதியில், பொன்னை, லாலாபேட்டை, சோளிங்கர் மற்றும் சித்துார் என, நான்கு முனை சந்திப்பு உள்ளது. இங்கிருந்து எளிதாக மேம்பாலத்தை அடைய அணுகு சாலை அவசியம்.
இந்த பாலத்திற்கான அணுகு சாலை அமைக்க கடந்த நவம்பரில் நிலம் கையகப்படுத்தப்பட்டது. 190 மீட்டர் நீளம் மற்றும், 9.6 மீட்டர் அகலமும் கொண்ட இந்த புதிய மேம்பாலத்தின் பணிகள், 90 சதவீதம் நிறைவு பெற்றுள்ளன.
பாலத்தின் தடுப்பு சுவர் அமைக்கும் பணிகள் தற்போது நடக்கின்றன. விரைவில் இதற்கான பணிகள் நிறைவு பெற்று, மேம்பாலம் பயன்பாட்டிற்கு திறந்து விடப்படும்.
இது குறித்து நெடுஞ்சாலை துறை காட்பாடி கோட்ட பொறியாளர் ஒருவர் கூறுகையில், 'பாலத்தின் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இணைப்பு சாலை மற்றும் தடுப்புச்சுவர் பணிகள் நிறைவு பெற்றதும் பயன்பாட்டிற்கு வரும்' என்றார்.