ADDED : செப் 04, 2026 03:52 PM
செவ்வாப்பேட்டை: செவ்வாப்பேட்டை பகுதியில், வீடு கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த, 35 வயது பெண், மின்சாரம் பாய்ந்து பலியானார்.
திருநின்றவூர் அடுத்த நத்தமேடு பகுதியைச் சேர்ந்தவர் முருகன், 40. இவருக்கு சகிலா, 35, என்ற மனைவியும், இரு மகள்களும் உள்ளனர்.
கட்டட பணி செய்து வரும் சகிலா, செவ்வாப்பேட்டை சிறுகடல் பகுதியில், தனியார் நிறுவனம் மூலம் நடந்து வரும் கட்டுமான பணியில் பணியில் ஈடுபட்டிருந்தார்.
நேற்று முன்தினம் இரவு, கட்டுமான பணித்தளத்தில், மின்சாதன பொருட்களை மாற்றியமைக்கும் பணியில், சகிலா ஈடுபட்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்ததில் துாக்கி வீசப்பட்டார்.
படுகாயமடைந்த அவரை, உடன் பணிபுரிவோர் மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சகிலா ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து, முருகன் கொடுத்த புகாரின்படி, செவ்வாப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
