/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தடையை மீறும் கன்டெய்னர் லாரிகள் பொன்னேரி நகருக்குள் வாகன நெரிசல்
/
தடையை மீறும் கன்டெய்னர் லாரிகள் பொன்னேரி நகருக்குள் வாகன நெரிசல்
தடையை மீறும் கன்டெய்னர் லாரிகள் பொன்னேரி நகருக்குள் வாகன நெரிசல்
தடையை மீறும் கன்டெய்னர் லாரிகள் பொன்னேரி நகருக்குள் வாகன நெரிசல்
ADDED : செப் 29, 2024 12:51 AM

பொன்னேரி:மீஞ்சூர் அடுத்த காட்டுப்பள்ளியில், இரண்டு துறைமுகங்கள் உள்ளன. துறைமுகங்களுக்கு கன்டெய்னர் ஏற்றிச்சென்று வரும் லாரிகள், மீஞ்சூர் - பொன்னேரி வழியாக, தச்சூர் சாலை சென்று, அங்கிருந்து சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் பயணத்தை தொடர்கின்றன.
கன்டெய்னர் லாரிகள் தச்சூர் - பொன்னேரி - மீஞ்சூர் மாநில நெடுஞ்சாலையில் பயணிக்கும்போது, பொன்னேரி நகர பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
காலை, மாலை நேரங்களில் ஏற்படும் அதிகப்படியான நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில், தச்சூர் - பொன்னேரி - மீஞ்சூர் மாநில நெடுஞ்சாலையில், காலை 6:00 - 10:00, பகல், 2:00 - இரவு 9:00 மணி வரை கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால், தடையை மீறி கன்டெய்னர் லாரிகள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், பொன்னேரி நகரத்திற்கு உட்பட்ட திருவொற்றியூர் நெடுஞ்சாலை, தாயுமானவன் தெரு, புதிய தேரடி தெரு சாலை சந்திப்பு ஆகிய இடங்களில், பாதாள சாக்கடை திட்டத்திற்கான பைப்லைன் பதிக்கும் பணிகள், மழைநீர் செல்வதற்காக புதிய கால்வாய் அமைக்கும் பணிகள் நடக்கின்றன.
இவற்றிற்காக, சாலையில் பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளன. பணிகள் முடிந்த இடங்கள் பள்ளங்களாகவும், சகதியுமாகவும் இருக்கின்றன. இதனால், அந்த இடங்கள் ஒரு வழிப்பாதையாக மாறி உள்ளன.
அதில், வாகனங்கள் தடுமாற்றத்துடன் பயணிக்கின்றன. கன்டெய்னர் லாரிகள் சென்று வரும் நேரங்களில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எதிர் எதிரே வாகனங்கள் பயணிக்க முடியாத நிலை உள்ளது.
இதனால், விபத்துகள் நேரிடும் அபாயம் உள்ளது. பாதாள சாக்கடை திட்டம் மற்றும் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் முடியும் வரையில், பொன்னேரி நகருக்குள் கன்டெய்னர் லாரிகள் வந்து செல்வதற்கு தடை விதிக்கவும், மாற்று வழித்தடமான மீஞ்சூர் - வண்டலுார் சாலையை பயன்படுத்தவும் அறிவுறுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.