வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக சாலையில் சுற்றித்திரியும் மாடுகள்
வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக சாலையில் சுற்றித்திரியும் மாடுகள்
ADDED : டிச 15, 2025 05:27 AM

ஊத்துக்கோட்டை:சாலையில் சுற்றித்திரியும் மாடு களை பிடித்து, அதன் உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் எச்சரித்தும், அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப் பது வாகன ஓட்டிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், கன்னிகைப்பேர், பெரியபாளையம், தண்டலம், பாலவாக்கம், ஊத்துக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் மாடுகள் சாலையில் சுற்றித்திரிகின்றன.
மேலும், சாலையில் ஆங்காங்கே ஓய்வெடுக்கின்றன. உரிமையாளர்கள் மாடுகளை முறையாக பராமரிக்காமல், சாலையில் திரிய விடுகின்றனர். இவ்வாறு சுற்றித்திரியும் மாடுகள், சாலையோரங்களில் உள்ள காய்கறி, பழம், பூ கடைகளுக்கு செல்கின்றன. அப்போது வியாபாரிகள் அதை துரத்தும்போது, அவை மிரண்டு ஓடுகின்றன.
அப்போது, இருசக்கர வாகனங்களில் செல்வோர் மற்றும் பாதசாரிகள் மீது மோதி விபத்து ஏற்படுகிறது. மாவட்டம் முழுதும் இதே நிலை தொடர்கிறது.
இதுகுறித்து திருவள்ளூர் கலெக்டருக்கு புகார்கள் சென்ற நிலையில், சாலையில் திரியும் மாடுகளை பிடிக்கவும், அதன் உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அறிவுறுத்தினார்.
ஆனால், உள்ளாட்சி அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
