ADDED : ஏப் 29, 2026 04:43 AM

சிறுவர்களை மது வாங்க சொன்ன தகராறில் ஒருவருக்கு வெட்டு
ஆவடி: ஆவடி, கவுரிப்பேட்டையைச் சேர்ந்தவர்கள் சார்லி, 41 மற்றும் சரவணன், 40. இருவரும் பூமாலை கட்டும் தொழில் செய்து வருகின்றனர். இருவரும், கடந்த 26ம் தேதி மது போதையில் கம்பர் தெரு அருகே நின்றிருந்தனர். அங்கு வீட்டு வாசலில் நின்றிருந்த சிறுவர்களை, மது வாங்கி வரும்படி சரவணன் வற்புறுத்தி உள்ளார். இதை சார்லி தடுத்துள்ளார். ஆத்திரமடைந்த சரவணன் பிளேடால் சார்லியின் இடது முழங்கை, மார்பில் கிழித்துள்ளார். அங்கிருந்தவர்கள் சார்லியை மீட்டு, ஆவடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். விசாரித்த ஆவடி போலீசார், சரவணனை நேற்று முன்தினம் கைது செய்தனர்.
புரோகிதரிடம் மொபைல் போன் பறித்த இளைஞர்கள் பிடிபட்டனர்
புழல்: மடிப்பாக்கம், அம்பேத்கர் சாலையைச் சேர்ந்தவர் கணேசன், 56; புரோகிதர். இவர், கடந்த 19ம் தேதி, புழல், கதிர்வேடு பகுதியில் உள்ள மண்டபத்தில் வேலை முடித்து, மண்டபத்தின் வெளியே வீட்டுக்கு செல்ல காத்திருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் இருவர், கணேசனின் மொபைல் போனை பறித்து தப்பினார். இது குறித்து விசாரித்த புழல் போலீசார், புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த சந்தோஷ், 19, வில்லிவாக்கத்தைச் சேர்ந்த பரத், 21, ஆகியோரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.
