UPDATED : மே 08, 2026 06:38 PM
ADDED : மே 08, 2026 06:20 PM
மயங்கி விழுந்த ஓட்டுனர் உயிரிழப்பு
மணவாளநகர்: சென்னை ராமாபுரம் செந்தமிழ்நகரைச் சேர்ந்தவர் சுரேஷ், 44. பூங்கொடி என்ற மனைவியும், இரு ஆண் குழந்தைகளும் உள்ளனர். மணவாளநகர் அடுத்த பாப்பரம்பாக்கத்தில் உள்ள தனியார் கம்பெனியில் ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார்.
கம்பெனி அருகே மாந்தோப்பில் துாங்க சென்றவர் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். உடன் பணிபுரிபவர்கள் மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின்படி, மணவாளநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
குளிர்பானம் வாங்குவது போல் நடித்து பெண்ணிடம் தாலி செயின் பறிப்பு
மணவாளநகர்: கடம்பத்துார் ஒன்றியம் மேல்நல்லாத்துாரைச் சேர்ந்தவர் ராகினி, 49. இவர், செந்தில் நகரில் குளிர்பான கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இவரது கடைக்கு வந்த மர்ம நபர், குளிர்பானம் வாங்கியுள்ளார். பின், 'ஜிபே'யில் பணம் அனுப்பவதாக கூறி நேரத்தை கடத்தி வந்துள்ளார். அப்போது, ராகினியின் கழுத்தில் அணிந்திருந்த ஒன்றரை சவரன் தாலி செயினை பறித்துவிட்டு, இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றார். இதுகுறித்த புகாரின்படி, மணவாாளநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
பட்டாசு வெடித்ததால் விபரீதம் பால் பண்ணை கண்ணாடி சேதம்
திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த காக்களூரைச் சேர்ந்தவர் வெங்கடேஷ்வரலு, 53. இவர், காக்களூர் பகுதியில் உள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியத்தில் உதவி பொது மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.
இவர், கடந்த 6ம் தேதி மாலை, காக்களூர் பகுதியில் உள்ள ஆவின் பால் பண்ணையில் நெய் தயாரிப்பு அறையில் ஆய்வு செய்து கொண்டிருந்தார். அப்போது, திடீரென மர்ம நபர்கள் பட்டாசு வெடித்தனர். இதில், பால் பண்ணையில் இருந்த கண்ணாடி பொருட்கள் சேதமடைந்தன. திருவள்ளூர் தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.
