UPDATED : ஜூலை 14, 2026 08:35 PM
ADDED : ஜூலை 14, 2026 08:32 PM
மீஞ்சூர்: அத்திப்பட்டு - நந்தியம்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள தண்டவாளப்பகுதியை இரண்டு புள்ளிமான்கள் கடந்த போது, கும்மிடிப்பூண்டி நோக்கி சென்ற ரயிலில் அடிபட்டு, சம்பவ இடத்திலேயே பலியாகின.
இது குறித்து, ரயில்வே நிர்வாகம் சார்பில், வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள், புள்ளிமான்களின் உடல்களை கைப்பற்றி சென்றனர்.
போலி உணவு பாதுகாப்பு அதிகாரி கைது
சோழவரம்: காரனோடை பஜார் பகுதியில் மளிகை கடை வைத்திருப்பவர் பெத்துராஜ், 59. நேற்று மாலை, இவரது கடைக்கு வந்த நபர், தான் உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரி என கூறியுள்ளார்.
சந்தேகமடைந்த பெத்துராஜ், சோழவரம் பகுதி உணவுபொருள் பாதுகாப்பு அதிகாரி மகேஸ்வரிக்கு தகவல் தெரிவித்தார். அங்கு வந்த மகேஸ்வரி, சோதனைக்கு வந்ததாக கூறிய நபரின் அடையாள அட்டையை வாங்கி சோதனை செய்தார்.
அப்போது, அது போலியானது என்பது தெரிந்தது. அதையடுத்து, அவரை பிடித்து சோழவரம் போலீசாரிடம் ஒப்படைத்தார்.
அவரை கைது செய்த போலீசாரின் விசாரணையில், சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியை சேர்ந்த பழனிவேல், 50, என்பதும், உணவு பாதுகாப்பு அதிகாரி எனக்கூறி, வியாபாரிகளிடம் பணம் வசூலித்து வந்ததும் தெரிந்தது.
