UPDATED : செப் 15, 2026 05:22 AM
ADDED : செப் 14, 2026 08:42 PM

திருவாலங்காடு:திருவாலங்காடு அருகே, அரசு விடுமுறை நாட்களில், அனுமதியின்றி ஏரியில் மண் எடுத்து வருவதாக, சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
திருவாலங்காடு ஒன்றியம், முத்துக்கொண்டாபுரம் கிராமத்தில், 120 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது. ஊரக வளர்ச்சித் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரியை நம்பி, 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயிர் செய்து வருகின்றனர்.
தற்போது, இந்த ஏரி நீரின்றி வறண்டு காணப்படுகிறது. முத்துக்கொண்டாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயசந்திரன், 50, என்பவர், விவசாய நிலத்தை மேம்படுத்துவதாக கூறி, திருத்தணி வருவாய் துறை மற்றும் திருவாலங்காடு ஊரக வளர்ச்சி அலுவலரிடம், முத்துக்கொண்டாபுரம் ஏரியில், 20 கன மீட்டர் பரப்பளவில் வண்டல் மண் எடுக்க அனுமதி பெற்றுள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மற்றும் நேற்று அரசு விடுமுறை தினத்திலும், அவர் விதிகளை மீறி, பொக்லைன் இயந்திரம் மூலம், டிராக்டர்களில் மண் எடுத்துள்ளார்.
வருவாய் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் முன்னிலையில் தான் மண் எடுக்க வேண்டும் என்ற விதி உள்ள நிலையில், அவர் கடந்த இரண்டு நாட்களாக, அரசு அலுவலர்கள் இல்லாத நிலையில் ஏரியில் மண் எடுத்து வருவதாக, சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
விவசாயிகள் போர்வையில் சிலர், வண்டல் மண் எடுக்க அனுமதி பெற்று, ஒரு யூனிட் மண் 1,500 - 3,000 ரூபாய் வரை விற்பனை செய்து வருகின்றனர்.
ஏரியில் எடுக்கப்படும் மண்ணை நிலத்திற்கு பயன்படுத்தாமல், வீடுகள் கட்டுவதற்கும், ரியல் எஸ்டேட் அதிபர்களின் நிலத்தை சமன்படுத்தவும், செங்கல் சூளைகளுக்கும் விற்பனை செய்கின்றனர்.
வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள், முறையாக கண்காணிப்பது இல்லை. கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து, திருவாலங்காடு பி.டி.ஓ., அருள் கூறுகையில், “முத்துக்கொண்டாபுரம் ஏரியில், விதிமீறி விடுமுறை நாளில் வண்டல் மண் எடுப்பதாக புகார் வந்தது. அதன்படி எச்சரித்து, மண் எடுப்பது நிறுத்தப்பட்டது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்படும்,” என்றார்.
