/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
செங்குன்றம் சாலையில் குடிநீர் குழாய் சேதம்
/
செங்குன்றம் சாலையில் குடிநீர் குழாய் சேதம்
ADDED : ஜன 11, 2025 11:43 PM

திருவள்ளூர்:வெள்ளியூரில் இருந்து, திருவள்ளூருக்கு வரும் குடிநீர் குழாய் சேதமடைந்துள்ளது.
திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட, 27 வார்டுகளில், 65,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். நகராட்சி முழுதும், 5,000க்கும் மேற்பட்ட வீட்டு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. வீட்டு இணைப்பு இல்லாத மக்களுக்கு, 8,000க்கும் மேற்பட்ட தெரு குழாய்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
நகராட்சியில், வீட்டு குழாய் மற்றும் தெரு குழாய் வாயிலாக, தினமும், 50 லட்சம் லிட்டர் அளவு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக, பட்டரைபெரும்புதுார், புங்கத்துார் உட்பட, 13 இடத்தில், ஆழ்துளை குழாய் கிணறு அமைத்து, தினமும், 15 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுகிறது.
கடந்த, 2004ம் ஆண்டு, வெள்ளியூரில் இருந்து, கொசஸ்தலை ஆற்றின் கரையோரம், ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு, குடிநீர் எடுக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
இங்கிருந்து, தினமும், 35 லட்சம் லிட்டர் அளவிற்கு குடிநீர் எடுக்கப்பட்டு, திருவள்ளூர் நகராட்சிக்கு விநியோகிக்கப்பட்டு வந்தது. இதற்காக, திருவள்ளூர் - செங்குன்றம் சாலை நடுவில் குழாய் பதிக்கப்பட்டு, குடிநீர் கொண்டு வரப்படுகிறது.
இந்த நிலையில், வெள்ளியூரில் இருந்து, திருவள்ளூர் வரும் குழாய், ஈக்காடு கண்டிகை அருகில் அழுத்தம் காரணமாக வெடிப்பு ஏற்பட்டு, குடிநீர் சேதமடைந்து வருகிறது.
இதனால், குடிநீர் விரயமாவதுடன், சாலையும் சேதமடைந்து விட்டது. இதையடுத்து, சேதமடைந்த குடிநீர் குழாய் உடைப்பினை குடிநீர் வடிகால் வாரியத்தினர் சீரமைப்பதற்காக, உடைப்பு ஏற்பட்ட இடத்தில் பள்ளம் தோண்டி சீரைமைக்கும் பணியை துவக்கி உள்ளனர்.

