/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஞாயிறு கிராமத்தில் ஏரி மதகு சேதம் வெளியேறும் மழைநீரால் நெற்பயிர்கள் பாதிப்பு
/
ஞாயிறு கிராமத்தில் ஏரி மதகு சேதம் வெளியேறும் மழைநீரால் நெற்பயிர்கள் பாதிப்பு
ஞாயிறு கிராமத்தில் ஏரி மதகு சேதம் வெளியேறும் மழைநீரால் நெற்பயிர்கள் பாதிப்பு
ஞாயிறு கிராமத்தில் ஏரி மதகு சேதம் வெளியேறும் மழைநீரால் நெற்பயிர்கள் பாதிப்பு
ADDED : ஜன 22, 2025 01:29 AM

சோழவரம்:சோழவரம் அடுத்த, ஞாயிறு கிராமத்தில், சம்பா பருவத்திற்கு நெல் பயிரிடப்பட்டு உள்ளது. இங்குள்ள பாசன ஏரியின் மதகு சேதம் அடைந்து, அதன் வழியாக மழையின்போது தேங்கிய தண்ணீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது.
மணல் மூட்டைகளை போட்டும், தண்ணீர் வெளியேறுவதை கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது. மதகு வழியாக வெளியேறும் தண்ணீர், அருகில் நெல் பயிரிடப்பட்டுள்ள விவசாய நிலங்களில் தேங்கி உள்ளது.
வடகிழக்கு பருவமழையின் பாதிப்பிற்கு உள்ளாகி, அதில் இருந்து மீண்டும் நெற்பயிர்கள் வளர்ந்து அறுவடைக்கு தயாரான நிலையில், தற்போது ஏரிநீரால் மீண்டும் பாதிப்படைந்து உள்ளன.
தண்ணீரில் மூழ்கி கிடக்கும் நெற்பயிர்களை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவிப்பிற்கு ஆளாகி உள்ளனர். ஒரு ஏக்கருக்கு, 23,000 - 25,000 ரூபாய் வரை செலவிட்டு, மழைநீரில் நெற்பயிர்கள் வீணாகி வருவதை கண்டு, விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர்.
அதேபோல, கூட்டம் கூட்டமாக வரும் மாடுகள், அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் கடித்து சேதப்படுத்தி வீணாக்குகின்றன.
இது குறித்து வேளாண், காவல் துறையினரிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.
ஞாயிறு கிராமத்தில் சேதம் அடைந்த ஏரியின் மதகு வழியாக வெளியேறும் மழைநீராலும், கூட்டமாக சுற்றும் மாடுகளாலும், அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் பாதிப்பு அடைந்து உள்ளன.
விவசாயிகள் வருவாய் இழப்பிற்கு ஆளாகி தவிப்பதால், உரிய இழப்பீடு வழங்கவும், ஏரி மதகை சீரமைக்கவும், மாடுகளை பிடிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.