/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கூவம் ஆற்றில் சேதமடைந்த தரைப்பால பாதை அடைப்பு
/
கூவம் ஆற்றில் சேதமடைந்த தரைப்பால பாதை அடைப்பு
ADDED : ஜூலை 16, 2025 01:45 AM

திருவள்ளூர்:திருவள்ளூர்-மணவாளநகர் இடையே உடைந்த தரைப்பால பாதை அடைக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர்-மணவாளநகர் இடையே, கூவம் ஆற்றை கடக்கும் வகையில், கடந்த, 70 ஆண்டுகளுக்கு முன், தரைப்பாலம் கட்டப்பட்டது. கடந்த, 17 ஆண்டுகளுக்கு முன் வரை, இத்தரைப்பாலம் வழியாகத்தான் சென்னையில் இருந்து திருவள்ளூர் வரும் வாகனங்கள் பயணித்தன.
வரதராஜபுரம் அருகில் சென்னை-அரக்கோணம் ரயில் கடவுப்பாதையில் அடிக்கடி ரயில்கள் செல்லும் போது, சாலை மூடப்படும். இதனால், ஏற்படும் அசவுகரியத்தை தவிர்க்க, அதற்கு அருகிலேயே கூவம் ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டப்பட்டது.
கடந்த, 2015ம் ஆண்டு கூவம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் இந்த தரைப்பாலம் உடைந்து, சேதமடைந்தது. இதையடுத்து, பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதுார் வழியாக வரும் வாகனங்கள் அனைத்தும் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலம் வழியாக பயணித்து வருகின்றன.
மேலும், வரதராஜநகர் பகுதியைச் சேர்ந்தவர்கள், மணவாளநகர் வழியாக ரயில் நிலையம் சென்று, நீண்ட துாரம் சுற்றி வருகின்றனர். சிலர், ஆபத்தான வகையில், உடைந்த தரைப்பாலம் வழியாக பயணித்து வந்தனர்.
இந்நிலையில், திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் கடந்த மாதம், வரதராஜபுரம் அருகில் உடைந்த தரைப்பாலத்தை ஆய்வு செய்தார். அப்போது, உடைந்த தரைப்பாலத்தை இடித்து புதிய பாலம் கட்டுவதற்கான திட்ட அறிக்கை தயார் செய்யுமாறு, துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து, நீர்வளத்துறையினர், தற்காலிகமாக, தரைப்பால பாதையின் இருபுறமும் தடுப்பு அமைத்து, யாரும் செல்லாத வகையில் நடவடிக்கை எடுத்துள்ளனர்.