/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தாழ்வாக செல்லும் மின்கம்பிகளால் ஆபத்து
/
தாழ்வாக செல்லும் மின்கம்பிகளால் ஆபத்து
ADDED : நவ 16, 2024 01:35 AM

பொன்னேரி:பொன்னேரி அடுத்த சோமஞ்சேரி கிராமத்தில் விவசாய நிலங்களில் உள்ள மோட்டார்களுக்கு மின்வினியோகம் செய்வதற்கு ஏதுவாக அங்குள்ள ஆரணி ஆற்றின் உள்பகுதியில் மின்மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.
தற்போது ஆற்றின் கரைகளை பலப்படுத்துவதற்காக அவற்றின் உயரம் அதிகரிக்கப்படுகிறது. இதனால் மின்மாற்றிக்கும், அங்கிருந்து விவசாய நிலங்களுக்கும் கரையின் குறுக்கே செல்லும் மின்ஒயர்கள் தாழ்வான நிலையில் உள்ளன.
ஆடு, மாடு மேய்க்க செல்லும் கிராமவாசிகள், கரைகள் மீது நடந்து செல்கின்றனர். கரையில் இருந்து கைக்கு எட்டும் தொலைவில் இவை இருப்பதால், அசம்பாவிதங்களுக்கு வாய்ப்பு உள்ளது.
மேலும், தாழ்வாக மின்கம்பிகள் செல்லும் பகுதிகளில் பொக்லைன் வாகனங்கள் செல்ல முடியாத சூழலில் கரை சீரமைப்பு பணிகளும் அரைகுறையாக விடப்பட்டு உள்ளன.
மின்மாற்றி மற்றும் மின்கம்பிகள் கரை சீரமைப்பு பணிகளுக்கு இடையூறு இருப்பதாக நீர்வளத்துறையினரும் கடந்த மே மாதம், பொன்னேரி மின்வாரியத்திற்கு கடிதம் அளித்தனர்.
இதுவரை மின்வாரியம் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாத நிலையே அங்கு உள்ளது. அசம்பாவிதங்கள் நேரிடும் முன், ஆற்றின் உள்பகுதியில் இருக்கும், மின்மாற்றியை கரைக்கு வெளிப்பகுதியில் உயரமான இடத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராமவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.