/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அரசியல் தலையீடுகள் இன்றி கடைகள் ஏலம் விட கோரிக்கை
/
அரசியல் தலையீடுகள் இன்றி கடைகள் ஏலம் விட கோரிக்கை
ADDED : மார் 18, 2025 12:49 AM

கும்மிடிப்பூண்டி; சென்னை -- கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில், 2018 ஜூன் மாதம், அ.தி.மு.க., ஆட்சியில், மாநில எல்லையோர ஒருங்கிணைந்த சோதனைச்சாவடிகள் திறக்கப்பட்டன.
ஆந்திரா நோக்கி செல்லும் திசையில் ஒன்றும், தமிழகம் நோக்கி செல்லும் திசையில் ஒன்றும் என, இரு சோதனைச்சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. அதில், நகலகம், உணவகம், வாகன உதிரிபாகங்கள் மற்றும் மருந்து கடை வைப்பதற்காக, தலா ஐந்து கடைகள் என, மொத்தம், 10 கடைகள் நிறுவப்பட்டன.
சோதனைச்சாவடி திறந்த ஆண்டே, கடைகளுக்கான பொது ஏலம் அறிவிக்கப்பட்டது. அப்போது, ஏலம் எடுப்பதில் அரசியல் கட்சியினர் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக ஏலம் ஒத்திவைக்கப்பட்டது.
அதன்பின், 2022ம் ஆண்டு தி.மு.க., ஆட்சியில், ஆகஸ்ட் மாதம் பொது ஏலம் நடந்தது. அப்போதும், கடைகளை பிரிப்பதில் அரசியல் கட்சியினர் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மற்றும் பிரச்னை காரணமாக, ஏலம் ரத்து செய்யப்பட்டது.
அரசியல் தலையீடு காரணமாக, ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக கடைகளை திறக்க முடியாமல் அரசு திணறி வருகிறது. இந்த சோதனைச்சாவடிகளில், தினமும் ஆயிரக்கணக்கான லாரிகளை நிறுத்தி, ஆவண தணிக்கை செய்யப்படுகிறது.
பல மணி நேரம் லாரிகள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. ஓட்டுநர்கள் நகல் எடுப்பதற்கும், காத்திருக்கும் நேரத்தில், உணவு மற்றும் தேநீர் அருந்த, 3 கி.மீ., தொலைவில் உள்ள எளாவூர் பஜார் பகுதிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.
சோதனைச்சாவடி வளாகத்தில் கடைகள் இருந்தும், அவை திறக்கப்படாத நிலையில், அங்கு வரும் வாகன ஓட்டிகள், மற்றொரு வாகனத்தில், 'லிப்ட்' கேட்டு எளாவூர் பஜார் பகுதி சென்று வருவதால் அவலம் தொடர்கிறது.
இந்நிலையில், அடுத்த மாத துவக்கத்தில், பொதுப்பணித் துறையினர் சார்பில், மீண்டும் பொது ஏலம் நடத்த திட்டம் வகுத்து வருகின்றனர். இம்முறையும் அரசியல் தலையீடுகள் இருந்தால், மீண்டும் ஏலம் ரத்தாகும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
எளாவூர் சோதனைச்சாவடியில், ஆயிரக்கணக்கான கனரக வாகன ஓட்டிகள் அலைக்கழிப்புக்கு ஆளாவதை தடுக்க, இம்முறை அரசியல் தலையீடுகள் இன்றி ஏலத்தை நடத்தி முடிக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.