ADDED : ஆக 12, 2026 09:01 PM
திருவள்ளூர், ஆக. 13–
ஆடி அமாவாசையை முன்னிட்டு, திருவள்ளூர் வீரராகவர் கோவில் குளத்தில், ஏராளமான பக்தர்கள் புனித நீராடி, முன்னோருக்கு தர்ப்பணம் செய்து, வழிபட்டனர்.
திருவள்ளூர் வீரராகவர் கோவிலில், தை, ஆடி மற்றும் புரட்டாசி அமாவாசை தினங்களில், ஹிந்துக்கள் தங்களது முன்னோருக்கு தர்ப்பணம் செய்வது வழக்கம்.
அதன்படி, திருவள்ளூர் வீரராகவர் கோவிலுக்கு, நேற்று முன்தினம் இரவு முதலே, ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும், ஏராளமான பக்தர்கள் திரண்டனர்.
அன்றிரவு, கோவில் வளாகத்தில் தங்கியிருந்த அவர்கள், நேற்று அதிகாலை, ஹிருதாபநாசினி குளத்தில் புனித நீராடினர். பின், குளக்கரையில் தங்களது முன்னோருக்கு தர்ப்பணம், திதி அளித்து, வழிபட்டனர். தொடர்ந்து, நீண்ட வரிசையில் காத்திருந்து, வீரராகவரை தரிசனம் செய்தனர்.
அமாவாசையை முன்னிட்டு, உற்சவர் வீரராகவர் ரத்னாங்கி சேவையில் அருள்பாலித்தார். மேலும், ஆடிப்பூர உத்சவத்தை முன்னிட்டு, 8வது நாளான ஆண்டாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
