தேவதானம் ரங்கநாதர் கோவிலுக்கு மினி பஸ் இயக்க பக்தர்கள் கோரிக்கை
தேவதானம் ரங்கநாதர் கோவிலுக்கு மினி பஸ் இயக்க பக்தர்கள் கோரிக்கை
ADDED : செப் 19, 2026 03:21 PM
பொன்னேரி: பிரசித்தி பெற்ற தேவதானம் ரங்கநாதர் கோவிலுக்கு, மினி பஸ் இயக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொன்னேரி அடுத்த தேவதானம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ரங்கநாதர் கோவில் உள்ளது. இங்குள்ள பெருமாள் அனந்தசயன கோலத்தில், ஐந்து தலை ஆதிசேஷன் மீது, 18 அடி நீளத்தில் காட்சியளிக்கிறார். இது, ‘வடஸ்ரீரங்கம்’ என அழைக்கப்படுகிறது.
சனிக்கிழமை மற்றும் விசேஷ நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல்கின்றனர். அதே சமயம், போக்குவரத்து வசதியின்றி பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
நேற்று புரட்டாசி மாதம் துவங்கிய நிலையில், கோவிலுக்கு அதிகளவில் பக்தர்கள் வந்தனர். பொன்னேரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து, மேற்கண்ட கோவிலுக்கு செல்ல வேண்டுமானால், அனுப்பம்பட்டு ரயில் நிலையம் சென்று, அங்கிருந்து ஆட்டோக்களில் பயணிக்க வேண்டும்.
இது, பக்தர்களுக்கு கூடுதல் பயண செலவைவும், நேர விரயத்தையும் ஏற்படுத்துகிறது. பொன்னேரியில் இருந்து கே.என்.கண்டிகை, வெள்ளகுளம், குமரசிறுளப்பாக்கம் கிராமங்கள் வழியாக, மினி பஸ் இயக்கினால் பக்தர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
எனவே, போக்குவரத்து கழக நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
