/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி கோவிலுக்கு செல்ல இரட்டை வழிப்பாதை...இழுபறி!: அறநிலைய துறையை குறைகூறும் நெடுஞ்சாலை துறை
/
திருத்தணி கோவிலுக்கு செல்ல இரட்டை வழிப்பாதை...இழுபறி!: அறநிலைய துறையை குறைகூறும் நெடுஞ்சாலை துறை
திருத்தணி கோவிலுக்கு செல்ல இரட்டை வழிப்பாதை...இழுபறி!: அறநிலைய துறையை குறைகூறும் நெடுஞ்சாலை துறை
திருத்தணி கோவிலுக்கு செல்ல இரட்டை வழிப்பாதை...இழுபறி!: அறநிலைய துறையை குறைகூறும் நெடுஞ்சாலை துறை
ADDED : நவ 10, 2024 02:24 AM

திருத்தணி:திருத்தணி முருகன் மலைக்கோவிலில் இருந்து வாகனங்கள் கீழே இறங்குவதற்கு, 10.75 கோடி ரூபாயில் மாற்று சாலை அமைக்கும் பணி துவங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 'தார்ச்சாலை அமைப்பதற்கான முன்வைப்பு தொகை, எங்கள் துறை கணக்கில் வரவு வைக்கப்படாததால் பணி துவங்குவதில் தாமதம் ஏற்படுகிறது' என, நெடுஞ்சாலை துறையினர் சமாளிக்கின்றனர்.
திருத்தணி முருகன் கோவிலுக்கு தினமும் தமிழகம் உட்பட அண்டை மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்து செல்கின்றனர். பெரும்பாலான பக்தர்கள் மலைக்கோவிலுக்கு கார், பேருந்து, வேன், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள் மூலம் சென்று மூலவரை தரிசித்து வருகின்றனர்.
மலைக்கோவிலுக்கு வாகனங்கள் சென்று வருவதற்கு கோவில் நிர்வாகம் சார்பில், ஒரே ஒரு மலைப்பாதை அமைக்கப்பட்டுள்ளதால் மலைப்பாதையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதனால் திருத்தணி -- அரக்கோணம் மாநில நெடுஞ்சாலையிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் மக்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமப்படுகின்றனர்.
குறிப்பாக, டிச.31 படித்திருவிழா, ஆடிக்கிருத்திகை மற்றும் தெப்பத்திருவிழா, இரு பிரம்மோற்சவம், மாதந்தோறும் வரும் கிருத்திகை போன்ற முக்கிய விழா நாட்கள் மற்றும் அரசு விடுமுறை நாட்களில் மலைப்பாதையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
ஒன்றரை கி.மீ., துாரம் கடப்பதற்கு, பல மணி நேரம் வாகன ஓட்டிகள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த 2018- 19ல், அ.தி.மு.க., ஆட்சியில் மலைக்கோவிலில் இருந்து வாகனங்கள் கீழே இறங்குவதற்கு தனியாக மாற்று மலைப்பாதை அமைக்க முதற்கட்டமாக மண்சாலை அமைத்தது.
பின், 2020ம் ஆண்டு நெடுஞ்சாலை துறையினரிடம் மாற்று தார்ச்சாலை அமைக்க, 9.10 கோடி ரூபாய் கோவில் நிர்வாகத்திடம் வழங்கியது. அரசாணை வெளியிடும் நிலையில் இருந்த போது, ஆட்சி மாற்றத்தால் மாற்றுப்பாதை திட்டம் கிடப்பில் போடப் பட்டது.
இந்நிலையில் கடந்த ஏழு மாதங்களுக்கு முன், கோவில் நிர்வாகம் ஏற்கனவே ஏற்படுத்திய மண்சாலையை தார்ச்சாலையாக மாற்றுவதற்கு கோவில் நிர்வாகம், கோவில் நிதியில் இருந்து, 10.75 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது. மேலும் மாற்று பாதை அமைத்து தருமாறு திருத்தணி நெடுஞ்சாலை துறையினருக்கு பரிந்துரை கடிதம் அனுப்பியது.
தொடர்ந்து, ஐந்து மாதங்களுக்கு முன் நெடுஞ்சாலை துறையினர் மண்சாலையில் வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்றி அளவீடு செய்து தார்ச்சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
ஆனால் பணி துவங்காமல் நெடுஞ்சாலை துறையினர் காலதாமதம் செய்து வருகின்றனர்.
இது குறித்து திருத்தணி நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மலைக்கோவிலில் கீழே இறங்குவதற்கு, ஏற்கனவே போடப்பட்ட மண் சாலையை தார்ச் சாலை மாற்றித்தருமாறு, 10.75 கோடி ரூபாய் தேவை என திட்ட மதிப்பீடு தயார் செய்து, தார்ச்சாலை அமைக்கும் முறை மற்றும் அதற்கான வரைப்படமும் கோவில் நிர்வாகத்திடம் வழங்கியுள்ளோம்.
கோவில் நிர்வாகம், எங்களின் மதிப்பீடு தொகையை எங்கள் துறை கணக்கில் இதுவரை முன்வைப்பு தொகையாக செலுத்தவில்லை. ஆகையால் பணிகள் மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நிதி ஒதுக்கீடு செய்த தொகையை எங்களிடம் ஒப்படைத்தால் மட்டுமே சாலைப்பணி துவங்கி, ஆறு மாதத்திற்குள் பணி முடித்து பயன்பாட்டிற்கு விடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
திருத்தணி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் பின்புறத்தில் இருந்து, 1.5 கி.மீ, நீளம், 15 மீட்டர் அகலத்திற்கு தார்ச்சாலை போடப்படும். இதில், பக்தர்கள் நடந்து செல்வதற்கு தனிபாதையும் மற்றும் வாகனங்கள் செல்ல தனிபாதையும் அமைக்கப்படும்.
நெடுஞ்சாலை துறை அதிகாரி
திருத்தணி.