10 சட்டசபை தொகுதிகளின் வரைவு ஓட்டுச்சாவடி பட்டியல் வெளியீடு
10 சட்டசபை தொகுதிகளின் வரைவு ஓட்டுச்சாவடி பட்டியல் வெளியீடு
ADDED : அக் 20, 2026 05:35 PM
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில், 10 சட்டசபை தொகுதிகளின் மறுசீரமைக்கப்பட்ட வரைவு ஓட்டுச்சாவடி மையங்களின் பட்டியலை, கலெக்டர் கவிதா நேற்று வெளியிட்டார்.
திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், 10 சட்டசபை தொகுதிகளின் மறுசீரமைக்கப்பட்ட வரைவு ஓட்டுச்சாவடி மையங்களின் பட்டியலை, மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான கவிதா, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் நேற்று வெளியிட்டார்.
பின், கலெக்டர் கவிதா கூறியதாவது:
இந்திய தேர்தல் ஆணையம், 1,200க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ள ஓட்டுச்சாவடிகளை பிரித்து, மறுசீரமைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டசபை தொகுதிகளிலும் உள்ள ஓட்டுச்சாவடிகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளன.
ஏற்கனவே உள்ள, 4,005 ஓட்டுச்சாவடிகளுடன், கூடுதலாக கும்மிடிப்பூண்டி – 2, ஆவடி – 3, மதுரவாயல், அம்பத்துார் மற்றும் மாதவரம் தலா – 1 என, கூடுதலாக 8 ஓட்டுச்சாவடிகள் சேர்க்கப்பட்டுள்ளன. தற்போது, ஓட்டுச்சாவடிகளின் எண்ணிக்கை, 4,013 ஆக உயர்ந்துள்ளது.
இது தொடர்பாக, அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள், தங்களுக்கு ஏதேனும் கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகள் இருப்பின், வரும் 25ம் தேதிக்குள், சம்பந்தபட்ட வாக்காளர் பதிவு அலுவலர்களிடம் எழுத்துப்பூர்வமாக அளிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
